பொது இடங்களில் குப்பை போடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தேசிய சுற்றுப்புற வாரியம் முடுக்கிவிட்டுள்ளது.
கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் குப்பை போடும் பிரச்சினை தொடர்பான புகார்கள் 15 விழுக்காடு அதிகரித்ததாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் மார்ச் 4ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
சிங்கப்பூரைச் சுத்தமாக வைத்திருப்பது அரசாங்கம் மற்றும் துப்புரவு பணியாளர்களின் பொறுப்பு என்று சிங்கப்பூரர்கள் பலர் நம்புவதாகத் தூய்மை தொடர்பான ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக திரு பே கூறினார்.
நாடு மற்றும் நாட்டு மக்களின் நலன் கருதி சிங்கப்பூரர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். பொது இடங்களில் குப்பை போட்டு துப்புரவு பணியாளர்களின் வேலைப் பளுவை அதிகரிக்க வேண்டாம் என்று திரு பே கேட்டுக்கொண்டார்.
அதிக அளவில் குப்பைகள் போடப்படும் இடங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இதற்கு முன்பு ஆண்டுக்கு 250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த எண்ணிக்கை 1,000ஆக உயர்த்தப்படும்.
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அந்தந்த இடங்களில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படும். அந்த இடத்தில் குப்பை போட்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
மே 3ஆம் தேதியிலிருந்து மே 6ஆம் தேதி வரை தேசிய சுற்றுப்புற வாரியம் நடத்திய அமலாக்க நடவடிக்கையின்போது பொது இடங்களில் குப்பை போட்டது, தடை செய்யப்பட்ட இடங்களில் புகைப்பிடித்தது, பொது இடங்களில் எச்சில் உமிழ்ந்தது ஆகியவை தொடர்பாக மொத்தம் 125 அபராதங்கள் விதிக்கப்பட்டன

