தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரு குற்றச்சாட்டுத் தொகுப்புகளையும் ஒரே வழக்கின்கீழ் விசாரிக்க ஈஸ்வரன் விடுத்த கோரிக்கை நிறைவேறியது

2 mins read
04e59005-09e6-4f7c-9165-b1eb0ca85d22
மே 8ஆம் தேதி காலை 9.25 மணி அளவில் எஸ். ஈஸ்வரன் தமது வழக்கறிஞர் குழுவுடன் உச்ச நீதிமன்றக் கட்டடத்தை அடைந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் முழு நாள் வழக்கு விசாரணைக்குப் பிறகு, இரண்டு குற்றச்சாட்டுத் தொகுப்புகளும் ஒரே வழக்கின்கீழ் விசாரிக்கப்படவேண்டும் என்று முன்வைத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஈஸ்வரனின் குற்றச்சாட்டுகள், $400,000க்கும் மேல் மதிப்புள்ள பொருள்களுடன் தொடர்புடையவை.

இந்நிலையில், தமக்கு எதிரான வழக்கை அரசாங்க வழக்கறிஞர்கள் கையாளும் விதம் குறித்து விளக்கம் கேட்டு உயர் நீதிமன்றத்தில் அவர் விண்ணப்பம் செய்தார்.

இதுதொடர்பாக மே 8ஆம் தேதி காலை 9.25 மணி அளவில் அவர் தமது வழக்கறிஞர் குழுவுடன் உச்ச நீதிமன்றக் கட்டடத்தை அடைந்தார்.

ஈஸ்வரனை மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங் பிரதிநிதிக்கிறார்.

அரசாங்க வழக்கறிஞர்கள் சார்பாக துணைத் தலைமைச் சட்ட அதிகாரி டாய் வெய் ஷியோங் வாதாடுகிறார்.

ஹோட்டல் உள்ளிட்ட சொத்துகளைக் கொண்ட பெருஞ்செல்வந்தர் ஓங் பெங் செங் தொடர்பான 27 குற்றச்சாட்டுகளையும் லம் சாங் ஹோல்டிங்ஸ் நிர்வாக இயக்குநர் டேவிட் லம் கோக் செங் தொடர்பான எட்டுக் குற்றச்சாட்டுகளையும் ஈஸ்வரன் எதிர்கொள்கிறார்.

இவ்விரு குற்றச்சாட்டுத் தொகுப்புகள் தொடர்பான வழக்கு விசாரணை 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுத் தொகுப்புகள் தனித்தனியே விசாரிக்கப்பட வேண்டுமா அல்லது ஒன்றாக விசாரிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றத்திடம் திரு சிங் விளக்கம் கேட்டார். அவை தனித்தனியே விசாரிக்கப்படுவதற்கான காரணம் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், இந்த இரண்டு குற்றச்சாட்டுத் தொகுப்புகளும் ஒரே வழக்கின்கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஈஸ்வரன் சார்பாக திரு சிங் கேட்டுகொண்டார்.

இரண்டு குற்றச்சாட்டுத் தொகுப்புகளும் ஒரே மாதிரியான அம்சங்களைக் கொண்டுள்ளதால் அவற்றை ஒரே வழக்கின்கீழ் விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

“இரு குற்றச்சாட்டுத் தொகுப்புகளையும் ஒரே நேரத்தில் விசாரிக்குமாறு எனது கட்சிக்காரர் கேட்டுக்கொள்கிறார். அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் கூறுகிறார்,” என்று நீதிபதி வின்செண்ட் ஹூங்கிடம் திரு சிங் தெரிவித்தார்.

திரு லம் தொடர்பான குற்றச்சாட்டுகளை முதலில் விசாரித்துவிட்டு பிறகு திரு ஓங் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு அரசாங்க வழக்கறிஞர்கள் சார்பாக திரு டாய் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்