ஆகாயப்படையின் எப்-16 விமானம் விபத்துக்குள்ளானது; விமானி உயிர் தப்பினார்

1 mins read
4a95ef6f-6701-4d06-b6a2-87feb0e31067
தெங்கா விமானப்படைத் தளத்தில் நேற்று (மே 8 ஆம் தேதி) பிற்பகல் 12.35 மணிக்கு சிங்கப்பூர் ஆகாயப்படையின் எப்-16 விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ்

சிங்கப்பூர் ஆகாயப் படையின் எப்-16 விமானம் விபத்துக்குள்ளானது. தெங்கா விமானத் தளத்தில் புதன்கிழமை (மே 8) பிற்பகல் 12.35 மணிக்கு விமானம் புறப்படும்போது ஏற்பட்ட பிரச்சினையால் அந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

நல்லவேளையாக விமானி, அவசரகால நடைமுறைகளைப் பயன்படுத்தி விமானத்தில் இருந்து வெளியேறி உயிர் தப்பினார். அவர் சுயநினைவுடனும் நடக்கக்கூடிய நிலையிலும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் மற்ற பணியாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து விரிவான முறையில் விசாரணை நடந்து வருவதாக சிங்கப்பூர் ஆகாயப்படை தெரிவித்துள்ளது. இது குறித்த மேல்விவரங்களைத் தற்காப்பு அமைச்சும் ஆகாயப் படையும் வெளியிடும்.

விபத்துக்குள்ளான விமானம், விமானி மட்டும் அமரக்கூடிய எப்-16C என்று அறியப்படுகிறது. சிங்கப்பூர் ஆகாயப் படையில் எப்-16 விமானம் 1980 ஆம் ஆண்டு இறுதியில் சேர்க்கப்பட்டதில் இருந்து விபத்துக்குள்ளான நான்காவது விமானம்.

கடைசியாக 2004 ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி அமெரிக்காவின் அரிஸோனாவில் சிங்கப்பூர் ஆகாயப்படையின் எப்16 விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 25 வயது விமானி லூ குவாங் ஹான் கொல்லப்பட்டார்.

“உயிர்பிழைத்த விமானிக்கு மருத்துவமனையில் முழுமையான மருத்துவப் பரிசோதனை அளிக்கப்பட்டது. அவருக்கு பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று அந்தப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது,” என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்