சவால்மிக்க விவகாரங்கள் தொடர்பாக முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் சிங்கப்பூரின் முன்னோடித் தலைவர்களைப் போல துணிவுடன் முடிவெடுப்பேன் என்று மே 15ஆம் தேதியன்று சிங்கப்பூரின் பிரதமராகப் பதவி ஏற்கவிருக்கும் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
அந்த விவகாரங்கள் சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரர்களின் நலனுடன் தொடர்புடையதாக இருந்தால் அவை குறித்து நான் தயங்காமல் துணிச்சலுடன் முடிவெடுப்பது உறுதி,” என்றார் துணைப் பிரதமர் வோங்.
தி இக்கனோமிஸ்ட் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் திரு வோங் இவ்வாறு கூறினார்.
இதே கருத்தை சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ முன்பு தெரிவித்திருந்தார்.
சிங்கப்பூரை ஆட்சி செய்பவர் யாராக இருந்தாலும் துணிச்சலுடன் முடிவெடுக்கும் குணமுடையவர்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்று திரு லீ தெரிவித்திருந்தார்.
உறுதியான நிலைப்பாடு கொண்டு முடிவெடுப்பவராக இருக்கும்போது மக்களின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காது தாம் சொல்வதை ஏற்க மக்களைப் பலவந்தப்படுத்தும் தலைவராக இருப்பீர்களா என்று பேட்டியாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த திரு வோங், “நான் அனைவரது கருத்துகளையும் கவனமாகச் செவிசாய்ப்பேன். எனக்கு எல்லாம் தெரியும் என்ற மனப்போக்குடன் இருந்துவிட மாட்டேன். பிறரின் புரிதல், நுண்ணறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைவனாக இருப்பேன். விவகாரங்களை மற்றவர்கள் எத்தகைய கோணத்திலிருந்து பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வேன். இறுதியில் சிங்கப்பூருக்கு நன்மை பயக்கும் முடிவையே எடுப்பேன்.” என்றார் திரு வோங்.
சில முடிவுகள் மக்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் நாட்டின் நலனுக்கு அவை சரியானதாக இருந்தால் அவற்றையே தேர்ந்தெடுக்கும் கடப்பாட்டைக் கொண்டுள்ளேன்,” என்றார் துணைப் பிரதமர் வோங்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, வெளிநாட்டு நிபுணர்களைச் சிங்கப்பூர் தொடர்ந்து வரவேற்கும் என்று திரு வோங் கூறினார்.
ஆனால், சிங்கப்பூரர்கள் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினராகிவிட மாட்டார்கள் எனத் திரு வோங் உறுதி அளித்தார்.
சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டுத் திறனாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படாவிடில் அவர்களது எண்ணிக்கை சிங்கப்பூரர்களைவிட அதிகமாகிவிடக்கூடும் என்றார் அவர்.
இருப்பினும், சிங்கப்பூரின் பொருளியலை மேம்படுத்துவதில் வெளிநாட்டு நிபுணர்கள் பங்களிப்பதால் அவர்கள் தேவைப்படுகின்றனர் என்று திரு வோங் கூறினார்.
கட்டுமானம், கடற்துறை போன்ற துறைகளில் சிங்கப்பூரர்கள் செய்ய விரும்பாத வேலைகளில் வெளிநாட்டினரை அமர்த்த வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது, புதிய திறன்கள் தேவைப்படும் வேலைகளிலும் அவர்கள் தேவைப்படுவதாக திரு வோங் கூறினார்.

