வீவக வீடுகளுக்கு $2 மில்லியன்; நியாயமற்ற விலை எனச் சாடிய அதிகாரிகள்

வீவக வீடுகளுக்கு $2 மில்லியன்; நியாயமற்ற விலை எனச் சாடிய அதிகாரிகள்

3 mins read
7d034724-a56a-41f7-93c4-bd8651afec67
புளோக் 314C எங்கர்வேல் லிங்க்கில் ஆறு படுக்கையறைகள், நான்கு குளியலறைகள் ஆகியவற்றைக் கொண்ட 2400 சதுர அடி பரப்பளவிலான ஜம்போ வீடு விற்பனைக்கு விடப்படுவதாக புரோப்பர்ட்டிகுரு இணையத்தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவ்விடத்தில் அத்தகைய வீடு ஏதும் இல்லை என்று அதிகாரிகள் கூறினர். - படம்: கூகல் வரைப்படம்

செங்காங் வட்டாரத்தில் அருகருகில் உள்ள இரண்டு ஐந்தறை வீடுகள், ஜம்போ வீடாக சந்தைப்படுத்தப்பட்டு அதற்கான விலை $2 மில்லியன் என அதை விற்பனை செய்பவர்கள் நிர்ணயித்தனர்.

அதே போல தோ பாயோ வட்டாரத்தில் உள்ள ஐந்துறை வீடு ஒன்றுக்கும் $2 மில்லியன் கேட்கப்படுகிறது.

இவை நியாயமற்ற விலை என்று அதிகாரிகள் சாடினர்.

இதுதொடர்பாக, மே மாதம் 8ஆம் தேதியன்று தேசிய வளர்ச்சி அமைச்சு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், ‘சிஇஏ’ எனும் சொத்து முகவைகளுக்கான மன்றம் ஆகியவை இணைந்து அறிக்கை வெளியிட்டன.

சம்பந்தப்பட்ட இரு வீடுகள் தொடர்பாக இரண்டு சொத்து முகவர்கள் விளம்பரம் செய்தது குறித்து சொத்து முகவைகளுக்கான மன்றத்துக்குத் தெரியும் என்றும் அதுதொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது என்றும் அறிக்கை தெரிவித்தது.

புளோக் 314C எங்கர்வேல் லிங்க்கில் ஆறு படுக்கையறைகள், நான்கு குளியலறைகள் ஆகியவற்றைக் கொண்ட 2400 சதுர அடி பரப்பளவிலான ஜம்போ வீடு விற்பனைக்கு விடப்படுவதாக புரோப்பர்ட்டிகுரு இணையத்தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அவ்விடத்தில் அத்தகைய வீடு ஏதும் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.

“இரண்டு ஐந்தறை வீடுகள் ஒன்றிணைக்கப்பட்டு ஜம்போ வீடாக விற்கப்படுவதாக விளம்பரத்தில் தெரிவிக்கபட்டது. ஆனால் அவ்வாறு செய்ய அனுமதி இல்லை,” என்று அதிகாரிகள் கூறினர்.

வாடிக்கையாளர்களுக்குத் தவறான தகவலைக் கொண்டு சேர்க்கக்கூடிய அந்த விளம்பரம் குறித்து அதைப் பதிவேற்றம் செய்த சொத்து முகவரின் முகவையிடம் மன்றம் புகார் அளித்ததை அடுத்து, அந்த விளம்பரம் நீக்கப்பட்டது.

“இந்த விவகாரம் குறித்து சொத்து முகவர்களுக்கான மன்றம் விசாரணை நடத்துகிறது. விதிமுறைகள் மீறப்பட்டது நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அதிகாரிகள் கூறினர்.

அந்த விளம்பரத்தை இஆர்ஏ சொத்து முகவையைச் சேர்ந்த சொத்து முகவர் திரு ஆண்ட்ரூ நாயர் பதிவேற்றம் செய்ததாக நம்பப்படுகிறது.

சம்பந்தப்பட்ட இரண்டு வீடுகளின் உரிமையாளர்களும் உறவுக்காரர்கள் என்றும் அந்த வீடுகளை அவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியபோது வரவேற்பு அறையில் உள்ள சுவரை இடித்து இரு வீடுகளையும் ஒன்றிணைக்க வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அவர்களுக்கு அனுமதி வழங்கியதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் திரு நாயர் கூறினார்.

இரு வீடுகளையும் ஒன்றிணைத்து விற்க அவற்றின் உரிமையாளர்கள் விரும்புவதாக அவர் தெரிவித்தார். ஆனால் அந்தச் சொத்தைத் தனி ஒருவரிடம் விற்க முடியாது என்றும் இரு தனிநபர்களிடம் அதை விற்க முடியும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இஆர்ஏயின் சட்டப் பிரிவு அந்த வீடுகளைத் தனித்தனியே விற்குமாறு தம்மிடம் கூறியதும் அந்த விளம்பரத்தை நீக்கியதாக திரு நாயர் கூறினார். ஒப்புதல் கிடைத்த பிறகு, அந்த இரு வீடுகளும் தனித் தனியாகச் சந்தைப்படுத்தப்படும் என்றார் அவர்.

இதற்கிடையே, தி பீக்@தோ பாயோவில் உள்ள டிபிஎஸ்எஸ் ஐந்தறை வீடு ஒன்றும் $2 மில்லியனுக்குச் சந்தைப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த வீட்டை விற்பனை செய்யும் நோக்கம் இருப்பதாக அதன் உரிமையாளர்கள் வீவகவுடன் பதிவு செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு செய்யாமல் வீட்டை விற்கப்போவதாக வீட்டின் உரிமையாளர்கள் விளம்பரம் செய்ய முடியாது.

அதுமட்டுமல்லாது, அந்த வீட்டிற்காகக் கேட்கப்படும் விலை அந்த வட்டாரத்தில் உள்ள வீடுகளின் ஆக அண்மைய விற்பனை விலையைவிட கிட்டத்தட்ட $500,000 என்பதை அதிகாரிகள் சுட்டினர்.

லோரோங் 1A தோ பாயோவில் உள்ள அந்த வீட்டின் பரப்பளவு 1,258 சதுர அடி.

அந்த வீட்டை விற்கப்போவதாக வீவகவுடன் பதிவு செய்ய அதன் உரிமையாளர் திட்டமிட்டுள்ளதாக இஆர்ஏ சொத்து முகவர் ஜோய்ஸ் லிம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்