இலைச்செறிவுகளுக்கிடையே அமைக்கப்படும் 24 மர வீடுகள் உட்பட மொத்தம் 338 அறைகளுடன் மண்டாயில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப அமைக்கப்படவிருக்கும் உல்லாசத் தலம் 2025ஆம் ஆண்டின் முதற்பாதியில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, மண்டாய் மழைக் காடு உல்லாசத் தலம் என்று அழைக்கப்படும்.
உள்நாட்டு சொகுசு ஹோட்டலான “பன்யான் டிரீ” நிறுவனத்தால் இந்த உல்லாசத்தலம் நிர்வகிக்கப்படும் என்றும் இது மண்டாயில் இருக்கும் ஐந்து வனவிலங்கு காப்பகங்களுக்கு மத்தியில் அமைக்கப்படும் என்றும் மண்டாய் வனவிலங்கு குழுமம் வியாழக்கிழமையன்று (மே 9) தெரிவித்தது.
முன்னதாக, இந்த உல்லாசத்தலம் 2023ஆம் ஆண்டு திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் கட்டுமானத் துறையில் ஏற்பட்ட ஊழியர்கள் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட தாமதங்களால் உல்லாசத்தலம் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மே மாதம் திறக்கப்பட்ட பறவைகள் மகிழ்வனம் போன்று மண்டாய் வட்டாரத்தில் இயங்கும் பிற வனவிலங்கு காப்பகங்களும் பாதிக்கப்பட்டன.
4.6 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த உல்லாசத்தலத்தில் நிலையான குடும்ப அறைகள் கொண்ட நான்கு மாடிக் கட்டடம் உள்ளது. அத்துடன் விருந்தினர் கூடம், சந்திப்பு அறைகள், உடற்பயிற்சிக் கூடம், கூரைகளுடன் அமைக்கப்பட்ட நீச்சல் குளம் போன்ற வசதிகளை உள்ளடக்கியது. மேலும், சிறந்த உணவகத்தையும் இது கொண்டிருக்கும்.
அப்பர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தைப் பார்க்கும் வகையில், தற்போதுள்ள தாவரங்கள், மரக்கட்டைகள் இப்பகுதியின் இயற்கை நிலப்பரப்பு ஆகியவற்றிற்குள் 24 உயர்ந்த விதை வடிவ மர வீடுகள் அமைக்கப்படும்.
இந்த உல்லாசத்தலம் திறக்கப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.