சிங்கப்பூர் போஸ்ட் (சிங்போஸ்ட்) நிறுவனத்தின் சென்ற நிதியாண்டுக்கான வருவாய் கிட்டத்தட்ட இருமடங்கானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து மறுமதிப்பீட்டினால் கிடைத்த $36.8 மில்லியன் இதற்கு முக்கியக் காரணம்.
நிகர லாபம் 217.4 விழுக்காடு அதிகரித்து $78.3 மில்லியனாகப் பதிவானதாக மே 10ஆம் தேதி சிங்போஸ்ட் தெரிவித்தது.
ஒவ்வொரு பங்குக்கும் 0.56 காசு ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநர் வாரியம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே நவம்பர் 2023ல் ஒரு பங்குக்கு 0.18 காசு இடைக்கால ஈவுத்தொகையாக வழங்கப்பட்டது. அதையும் சேர்த்து, மொத்த ஈவுத்தொகை ஒரு பங்குக்கு 0.74 காசு ஆகும். ஓராண்டுக்கு முன்புடன் ஒப்பிடுகையில் இது 28 விழுக்காடு அதிகம்.
சிங்போஸ்ட் குழுமத் தலைமை நிர்வாகி வின்சென்ட் ஃபாங், “எங்களது உருமாற்றத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் உத்திகள் வர்த்தகத்தில் தொடர்ந்து நல்ல பலனளிக்கின்றன,” என்று கூறினார்.
சொத்து மறுமதிப்பீட்டுக்குப் பிறகு, ஆண்டின் பிற்பாதிக்கான நிகர லாபம் 93.4 விழுக்காடு அதிகரித்து $66.9 மில்லியனாகப் பதிவானதாகக் கூறப்பட்டது.
ஆண்டின் பிற்பாதிக்கான வருவாய் 5.9 விழுக்காடு குறைந்து 859.5 மில்லியனாகப் பதிவானது. கப்பல் சரக்குப் போக்குவரத்து மூலம் கிட்டும் வருவாய் குறைந்ததே இதற்கு முக்கியக் காரணம்.
தொடர்புடைய செய்திகள்
முழு ஆண்டுக்கான புள்ளிவிவரங்களின்படி, சிங்போஸ்ட் குழுமத்தின் வருவாய் 9.9 விழுக்காடு சரிந்து $1.69 பில்லியனாகப் பதிவானது.
ஆஸ்திரேலியாவில் சிங்போஸ்ட்டின் வருவாய் 6.3 விழுக்காடு கூடி 921.3 மில்லியன் ஆஸ்திரேலிய டாலராகப் (S$824 மில்லியன்) பதிவானது.

