தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$700,000 சுங்கத் தீர்வை, வரி செலுத்தாத சிகரெட்டுகள் தொடர்பில் மூவர் கைது

1 mins read
8ab1e52f-5069-48e9-86eb-cd05aa1b377c
சுங்கத்துறை அதிகாரிகள், தொழிற்சாலைக் கட்டடம் ஒன்றில் 2,997 பெட்டிகளில் இருந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளையும் காரின் பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 240 பெட்டிகளில் இருந்த அத்தகைய சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். - படம்: சிங்கப்பூர் சுங்கத்துறை

சுங்கத்துறையினர் இந்த வாரம், 6,470 பெட்டிகளில் இருந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்ததுடன் ஆடவர் மூவரைக் கைது செய்துள்ளனர்.

அவற்றின் தொடர்பில் $701,166 பொருள், சேவை வரி ஏய்க்கப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறை, மே 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிராங்கூன் நார்த், கல் சர்க்கிள் வட்டாரங்களில் மே 6ஆம் தேதி சுங்கத்துறையினர் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையில் அந்த ஆடவர்கள் பிடிபட்டதாகக் கூறப்பட்டது.

சிராங்கூன் நார்த் அவென்யூ 4ல் உள்ள தொழிற்துறைக் கட்டடத்தில், ஆடவர்கள் இருவர் பழுப்பு நிறப் பெட்டிகளை ஒரு காரில் ஏற்றுவதை அதிகாரிகள் கண்டனர். அவற்றில் கள்ளச் சிகரெட்டுகள் இருக்கக்கூடும் என்று சந்தேகித்தனர்.

சோதனையில், 2,997 பெட்டிகளில் இருந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளையும் காரின் பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 240 பெட்டிகளில் இருந்த அத்தகைய சிகரெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதன் தொடர்பில், சிங்கப்பூரரான 24 வயது ஆடவரும் மலேசியரான 37 வயது ஆடவரும் கைது செய்யப்பட்டனர். சம்பவ இடத்திற்கு அருகே சுற்றிக்கொண்டிருந்த 42 வயது மலேசிய ஆடவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர், கல் சர்க்கிள் வட்டாரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 3,233 பெட்டிகளில் இருந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பிடிபட்டன.

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளுடன் இரு வாகனங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்