நாட்டை முன்னேற்றுவதற்கான தம்முடைய பயணத்தில் எல்லாரையும் இணைக்க முயன்றதாகவும் அதன் பயனாக சில வெற்றிகளை எட்ட முடிந்ததாகவும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார்.
நாட்டை இருபது ஆண்டுகாலம் வழிநடத்திச் சென்ற பின்னர், சிங்கப்பூரர்களுக்குச் சேவையாற்ற தாம் திட்டமிட்ட செயல்களைச் செய்து முடித்ததில் தமக்கு வருத்தம் ஏதும் இல்லை என்று அவர் கூறி உள்ளார்.
ஒரு சிறிய சிவப்புப் புள்ளியாக மிளிரும் சிங்கப்பூரில் மக்கள் அமைதியாகவும் மனநிறைவுடனும் வாழ்வதற்கு சிங்கப்பூரர்களின் முயற்சியே காரணம் என்று நாட்டு மக்களுக்கு வெளியிட்ட தகவலில் பிரதமர் லீ குறிப்பிட்டு உள்ளார்.
வரும் புதன்கிழமை (மே 15) தமது பிரதமர் பொறுப்பை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் திரு லீ ஒப்படைக்க உள்ளார். சிங்கப்பூரை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல புதிய தலைவரிடம் பொறுப்பை ஒப்படைக்க அவர் தயாராகி வருகிறார்.
அதன் தொடர்பில் ஆங்கில, சீன ஊடகங்களுக்கு அவர் விரிவாக பேட்டி அளித்துள்ளார். பிரதமர் பொறுப்பில் இருந்த காலங்களை நினைவுகூர்ந்த திரு லீ, மிக இயல்பாகவும் புன்னகையுடனும் பல விவரங்களை அளித்தார்.
“சிங்கப்பூரர்கள் என்பதில் நாம் பெருமையடைகிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிறைய சாதித்து உள்ளோம்.
“சிங்கப்பூரர் ஒவ்வொருவரின் கடின உழைப்பும் அதற்குக் காரணம். அவர்களின் முயற்சிக்கும் ஆதரவுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.
“தலைமைத்துவ மாற்றத்திற்கு நீண்ட நெடுங்காலமாக நாம் ஆயத்தமாகி வந்துள்ளோம்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே இருமுறை நடைபெற்ற தலைமைத்துவ மாற்றம் வெற்றிகரமாக நிறைவேறி உள்ள வேளையில் மூன்றாவது மாற்றமும் சுமுகமாகவும் அமைதியுடனும் நடந்தேறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
1984ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்த திரு லீ, முன்னாள் பிரிகேடியர் ஜெனரல் ஆவார். முதன்முதலில் துணை அமைச்சர் பொறுப்பில் அப்போது அவர் அமர்த்தப்பட்டார்.
தற்போதைய பதவி ஒப்படைப்பிற்குப் பின்னர் அமைக்கப்படும் புதிய அமைச்சரவையில் மூத்த அமைச்சராக அவர் செயல்படுவார்.
இதற்கு முன்னர் திரு லீ குவான் யூ பிரதமர் பொறுப்பில் இருந்து விலகிய பின்னர் சாதுரியமாகப் பிரச்சினைகளைக் கையாண்டதுபோல நீங்களும் செயல்படுவீர்களா அல்லது இரண்டாம் பிரதமர் கோ சோக் டோங், தோழமையை வளர்க்கப் பல நாடுகளுக்குச் சென்றதுபோல நீங்களும் பயணம் செய்வீர்களா என்று திரு லீயிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த அவர், “என்னை அறிந்தவர்கள் மற்றும் நான் பேசக்கூடியவர்கள் என்ற அளவில் நான் எனது பணியை ஆற்றி அதன் மூலம் பயனடைய நிச்சயம் முயல்வேன்.
“இருப்பினும், குறிப்பிடத்தக்க கொள்கை மற்றும் ரகசியக் கொள்கை என்று வரும்போது பிரதமர்தான் முடிவெடுப்பார். அவற்றின் தொடர்பில் எனது ஆதரவை பிரதமர் நாடினால் அதனை ஏற்றுச் செயல்படுவேன்,” என்றார் திரு லீ.