சிங்கப்பூரில் கடும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும்போது தொழிற்சாலைகள், குடும்பங்கள் தாமாகவே முன்வந்து மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள். மின்சாரத்தை பங்கீட்டு முறையில் விநியோகிப்பது கடைசி தீர்வாகவே இருக்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் எரிசக்தி சந்தை ஆணையம் (இம்ஏ) தெரிவித்துள்ளது.
மின்சாரம், எரிவாயு சட்டத்தில் சில திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
அதன்படி மிக மோசமான சூழ்நிலையில் நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு மின்விநியோகிப்பில் பங்கீட்டு முறையை அறிமுகப்படுத்துவதற்கு இஎம்ஏவுக்கு அதிகாரமளிக்கப்படும்.
இதன் தொடர்பில் மே 8ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை இஎம்ஏவும் வர்த்தக, தொழில் அமைச்சும் பொதுமக்களிடமிருந்து கருத்தறியும் வேலையில் இறங்கியுள்ளன.
உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு திட்டமிடல், எரிசக்தி சந்தையை ஒழுங்குபடுத்துதல் உட்பட சிங்கப்பூரின் மின்சக்தி விநியோக முறை கணிசமான அளவு மாற்றம் கண்டு வருகிறது.
ஒழுங்குமுறை கட்டமைப்பு, எரிசக்தி துறையில் கரிம வெளியேற்றம் இல்லாமல் இருப்பதை ஆதரிக்கிறது. எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. சிங்கப்பூரின் மின்சாரம் கட்டுபடியாகக் கூடிய விலையில் வைத்திருக்க உதவுகிறது.
எப்படி மின்சாரம் பங்கீட்டு முறையில் வழங்கப்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டதற்கு அனைத்து பயனீட்டாளர்களும் மின்சாரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது முழுமையாக மின்சாரப் பயன்பாட்டை நிறுத்த வேண்டியிருக்கும் என்று ஆணையம் கூறியது.
இருந்தாலும் எரிசக்தியை பங்கீட்டு முறையில் விநியோகிப்பதற்கு முன்பு சூழ்நிலையின் தீவிரத்தைப் பொறுத்து நுகர்வோர் தாமாகவே முன்வந்து எரிசக்தியை சேமிப்பதற்கு ஊக்குவிக்கப்படும் என்று ஆணையம் விளக்கியது.

