மரினா சவுத், சாங்கியில் உலகத்தர சுற்றுலாத் தலங்கள்

மரினா சவுத், சாங்கியில் உலகத்தர சுற்றுலாத் தலங்கள்

2 mins read
ae16c51b-c6d3-4ec9-8a08-55400abb35e8
மரினா சவுத்தில் அமையவிருக்கும் ஆரோக்கியச் சுற்றுலாத் தலம் (இடம்). சாங்கியில் அமையும் போர்ஷ அனுபவ நிலையத்தில் இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள கார் ஓட்டும் பாதை இடம்பெறும். - படங்கள்: சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், போர்ஷ

சிங்கப்பூரில் புதிதாக உலகத்தரமிக்க இரண்டு சுற்றுலாத் தலங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.

மரினா பே வட்டாரத்தில் 2030ஆம் ஆண்டுக்குள் ஆரோக்கியச் சுற்றுலாத் தலம் கட்டப்படும். 2027ஆம் ஆண்டுக்குள் சாங்கியில் போர்ஷ அனுபவ நிலையம் கட்டப்படும்.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான கிரேஸ் ஃபூ, மே 10ஆம் தேதி, அதைத் தெரிவித்தார்.

மரினா அணைக்கட்டுக்கு அருகே மரினா சவுத்தில் ஆரோக்கியச் சுற்றுலாத் தலத்தைக் கட்டுவதற்கான ஏலக் குத்தகைக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றார் அவர்.

சிங்கப்பூரை நகர்ப்புற ஆரோக்கிய மையமாக வடிவமைக்க அரசாங்கம் விரும்புவதாகத் திருவாட்டி ஃபூ கூறினார்.

சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் தொழிற்துறைக் கருத்தரங்கில் அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய கழகத்தின் தலைமை நிர்வாகி மெலிசா ஓவ், “உலக அளவில் ஆரோக்கியச் சுற்றுலாத் தலச் சந்தையில் சிங்கப்பூர் சிறப்பாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகளை இது அமைத்துத்தரும்,” என்றார். அடுத்த சில மாதங்களில் ஏலக்குத்தகை அறிவிக்கப்படும் என்றார் அவர்.

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், ஆரோக்கியம் சார்ந்த கட்டமைப்புகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது.

சிங்கப்பூர் ஆரோக்கிய விழா, மூன்றாவது முறையாக, ஜூன் 21 முதல் ஜூலை 21ஆம் தேதி வரை நடைபெறும். இதில் 75 பங்காளித்துவ அமைப்புகள் நடத்தும் உடலுறுதி, தியானப் பயிலரங்கு உள்ளிட்ட 120க்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

சாங்கியில் உருவாகும் ‘போர்ஷ’ அனுபவ நிலையம், பிரிட்டனின் சில்வர்ஸ்டோன், ஜெர்மனியின் ஹோக்கன்ஹைம்ரிங் போன்ற பந்தயத்துக்குப் புகழ்பெற்ற இடங்களில் உள்ளதைப்போல் கட்டப்படும்.

சாங்கி கண்காட்சி நிலையத்துக்கு அருகே அது கட்டப்படும். ஜெர்மனியைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷ, தென்கிழக்காசியாவில் அமைக்கும் முதல் அனுபவ நிலையமாக அது விளங்கும்.

இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள கார் ஓட்டும் பாதை, போர்ஷவின் விற்பனைக்குப் பிந்திய சேவை வழங்கும் நிலையம் போன்றவற்றுடன் கண்காட்சிகள், பந்தய அனுபவம் தரும் பாவனைக் கூடம் போன்றவையும் அந்த நிலையத்தில் அமைந்திருக்கும்.

குறிப்புச் சொற்கள்