துப்பாக்கியை ஒப்படைக்காத அதிகாரிக்கு வலைவீச்சு; நள்ளிரவில் கைது

2 mins read
f7b81fe1-6961-4cf9-b18d-171279a3685a
சட்டவிரோமாக ஆயுதங்களை எடுத்துச் சென்ற அதிகாரி விக்டோரியா ஸ்திரீட்டில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘செர்டிஸ்’ துணைக் காவல் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், வேலை முடிந்த பிறகு துப்பாக்கியையும் பத்து தோட்டாக்களையும் திருப்பி ஒப்படைக்காததால், மே 9ஆம் தேதி, அவரை 100க்கும் மேற்பட்டவர்கள் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர்.

மே 10ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இது குறித்து காவல்துறை விளக்கம் அளித்தது.

மே 9ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் வேலை முடிந்த பிறகு ஆயுதங்களை ஒப்படைக்காத அதிகாரி மீது இரவு 9.50 மணியளவில் புகார் அளிக்கப்பட்டது. அடுத்த இரண்டரை மணி நேரத்தில் 27 வயது சிங்கப்பூரரான அவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

குற்றப் புலனாய்வுத் துறை, சிறப்பு செயல்பாட்டுத் தளபத்தியம் உள்ளிட்ட பிரிவுகள் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டன.

‘சார்ஜெண்ட்’ தகுதியைப் பெற்றுள்ள அவர் மே 9ஆம் தேதி காலை 7.45 மணிக்கு வேலையைத் தொடங்கினார். அதே நாளில் மாலை 7.45 மணியளவில் அவருக்கு வேலை முடிந்தது. அன்று மாலை 8.30 மணியளவில் அவர் ஆயுதங்களை ஒப்படைத்தாக வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யத் தவறியதால் ஆயுதப் பாதுகாப்பு அறை 8.35 மணிக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது.

விமான நிலையத்தில் வேலை முடிந்த பிறகு அந்த அதிகாரி சாதாரண உடையில் வெளியேறியதைக் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் காட்டின.

அவர் தோட்டாக்களால் நிரப்பப்பட்ட ‘டாரஸ்’ துப்பாக்கியை வைத்திருந்தார். அதில் ஐந்து தோட்டாக்கள் போடப்பட்டிருந்தன. விரைவாகத் தோட்டாக்களை நிரப்பும் சாதனத்துடன் மேலும் ஐந்து தோட்டாக்களும் பையில் தடியும் அவரிடம் இருந்தன.

விக்டோரியா ஸ்தீரிட்டில் நள்ளிரவு நேரத்தில் நோக்கமின்றி சுற்றிக் கொண்டிருந்த அவரை காவலர்கள் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்தனர்.

அவர் எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை என்று காவல்துறை கூறியது.

பொதுப் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்காக காவலர்கள் விரைவாகச் செயல்பட்டு அவரை கைது செய்துள்ளதாகக் காவல்துறையின் தற்காலிகத் துணை ஆணையர் ஷாங் வெய்ஹான் தெரிவித்தார்.

ஆயுதங்களை உரிய நேரத்தில் ஒப்படைக்காத அதிகாரி மீது மே 11ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்