கழிவறையில் அடைத்து சிறுமி கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம்; குழந்தைப் பாதுகாப்பு முறையை வலுப்படுத்தும் அமைச்சு

கழிவறையில் அடைத்து சிறுமி கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம்; குழந்தைப் பாதுகாப்பு முறையை வலுப்படுத்தும் அமைச்சு

2 mins read
e24a2f1f-4fde-4616-931a-b5e25b6e1698
குழந்தைப் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்த அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடுமையான ஊட்டச் சத்து குறைபாடுள்ள ஐந்து வயது சிறுமியை பத்து மாதங்களாக கழிவறையில் அடைத்து, இறக்கும் வரை தந்தை கொடுமைப்படுத்திய சம்பவத்தால் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, குழந்தைப் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

குடும்பச் சேவை நிலையங்களில் உள்ள குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் பணியாற்றும் ஊழியர்களின் பயிற்சி வழிகாட்டியை மேம்படுத்துவது அவற்றில் ஒன்று. குழந்தைகளின் பாதுகாப்பு, நலன்களை உறுதி செய்வதற்காக பாதிக்கப்படக்கூடிய குடும்ப உறுப்பினர்களை நேரில் பார்க்கவும் மாற்று பராமரிப்பு மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர் பராமரிப்பில் இருந்து வீடு திரும்பியவர்களுக்கு வழக்கமான பாதுகாப்பு சோதனைகள், கண்காணிப்பு ஆகியவற்றை உறுதி செய்வதும் இதன் நோக்கம்.

கழிவறையில் அடைத்துவைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட ஆயிஷாவுக்கு வயது ஐந்து. அவருடைய இளைய சகோதரரும் தந்தையின் கொடுமைகளுக்கு ஆளானார். சிறுவனும், தந்தையின் இரண்டாவது திருமணத்தில் பிறந்த நான்கு உடன்பிறந்தவர்களும், வளர்ப்புத் தாயின் முந்தைய திருமணத்தில் பிறந்த குழந்தையும் தற்போது சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் குழந்தைப் பாதுகாப்பு சேவையின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சின் பேச்சாளர் ஒருவர் மே 10ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தகவல் தெரிவித்தார்.

ஆயிஷாவை துன்புறுத்திக் கொன்றதற்காகவும் அவரது இளைய சகோதரரை கொடுமைப்படுத்தியதற்காகவும் ஏப்ரல் 30ஆம் தேதி தந்தைக்கு 34½ ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. 44 வயது தந்தை, 20க்கும் மேற்பட்ட முறை ஆயிஷாவின் முகத்தைத் தாக்கியதால் 2017ஆம் ஆண்டில் தலைக்காயத்தால் அவர் உயிரிழந்தார்.

ஆயிஷாவின் தந்தை, இரண்டு ஆண்டுகளாக தனது இரண்டு குழந்தைகளுக்கும் மிகக் குறைந்த உணவையே கொடுத்தார். இதனால் அவர்கள் மலத்தை சாப்பிட்டனர். ஆயிஷா, இறக்கும்போது 13.2 கிலோ எடை மட்டுமே இருந்தது.

“சமூகம் அவரை நினைவில் வைத்திருக்க வேண்டும்,” என்பதற்காக ஆயிஷாவின் பெயரை வெளியிட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்