அன்வார்: சிங்கப்பூர்-மலேசியா உறவைத் தொடர்ந்து வலுப்படுத்த தயாராக இருக்கிறேன்

2 mins read
7571555d-2ff7-4a7b-8352-db3e8b3fa4c5
பிரதமர் லீ சியன் லூங்குடனும் அவரது மனைவி திருவாட்டி ஹோ சிங்குடனும் தமக்கும் தமது துணைவியார் அசிசாவுக்கு மிக நெருங்கிய நட்புறவு இருப்பதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். - படம்: ஃபேஸ்புக்/அன்வார் இப்ராகிம்

மே 15ஆம் தேதியன்று பிரதமர் பதவியிலிருந்து பிரதமர் லீ சியன் லூங் விலகுகிறார். சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக திரு லாரன்ஸ் வோங் பதவி ஏற்கிறார்.

இதற்கிடையே, திரு லீ தம்மைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் மே 10ஆம் தேதியன்று பதிவிட்டார்.

“மலேசிய செயற்கை நுண்ணறிவு நெக்சஸ் 2024 திட்டத்தின் அறிமுக விழாவின்போது எனது நண்பரும் சிங்கப்பூர் பிரதமருமான திரு லீ சியன் லூங் என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.

“பிரதமர் பதவியைத் திரு லாரன்ஸ் வோங்கிடம் அடுத்த வாரம் ஒப்படைக்கப்போவதாக அவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். சிங்கப்பூரின் புதிய தலைமைத்துவத்தின்கீழ் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவு தொடர வேண்டும் என்று தாம் விரும்புவதாக திரு லீ என்னிடம் தெரிவித்தார்.

“திரு லீயின் இந்த விருப்பத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன், அதை வரவேற்கிறேன். திரு வோங்கின் தலைமையின்கீழ் செயல்படும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு சிங்கப்பூர்-மலேசியா உறவைத் தொடர்ந்து வலுப்படுத்த தயாராக இருக்கிறேன்.

“மேலும், கூடிய விரைவில் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு திரு லீ, அவரது துணைவியாரான திருவாட்டி ஹோ சிங்கிற்கும் அழைப்பு விடுத்துள்ளேன். அவர்கள் இருவருடன் எனக்கும் எனது துணைவியார் அசிசாவுக்கும் தனிப்பட்ட முறையில் மிக நெருங்கிய நட்புறவு உள்ளது.

“எனது நண்பர், திரு லீக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் ஒளிமயமான எதிர்காலம் இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்,” என்று திரு அன்வார் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்