வேலை முடிந்த பிறகும் தோட்டாக்களால் நிரப்பப்பட்ட துப்பாக்கியை வைத்துக்கொண்டு பூகிஸ் பிளஸ் கடைத்தொகுதியில் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்ததாக ‘செர்ட்டிஸ்’ துணைக் காவல் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூரரான 28 வயது ஹெங் ஜுன் ஹாவ் ‘டாரஸ்’ துப்பாக்கியை வைத்திருந்ததாகவும் அதில் ஐந்து தோட்டாக்கள் போடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. விரைவாகத் தோட்டாக்களை நிரப்பும் சாதனத்துடன் மேலும் ஐந்து தோட்டாக்களை அவர் வைத்திருந்ததாக அறியப்படுகிறது.
மே 9ஆம் தேதி இரவு 8 மணியிலிருந்து 12.20 மணி வரை அவர் கடைத்தொகுதியின் ஐந்தாவது மாடியில் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஹெங், சாங்கி சிறைச்சாலையில் உள்ள மருத்துவ நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும் என்று மே 11ஆம் தேதியன்று தெரிவிக்கப்பட்டது.
சார்ஜெண்ட் பதவி வகிக்கும் ஹெங், மே 9ஆம் தேதி காலை 7.45 மணிக்கு வேலையைத் தொடங்கினார். அதே நாளில் மாலை 7.45 மணியளவில் அவருக்கு வேலை முடிந்தது. அன்று மாலை 8.30 மணிக்குள் அவர் துப்பாக்கியையும் தோட்டாக்களையும் திருப்பி ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யாததை அடுத்து, ‘செர்ட்டிஸ்’ துணைக் காவல் படையின் ஆயுதக் கிடங்கு 8.35 மணிக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது.
விமான நிலையத்தில் வேலை முடிந்த பிறகு, ஹெங் சாதாரண உடையில் வெளியேறியதைக் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் காட்டின.
அவரை 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டபோது ஹெங் எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
துப்பாக்கியை எடுக்கவும் அவர் முயற்சி செய்யவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
துப்பாக்கியையும் தோட்டாக்களையும் ஹெங் திருப்பி ஒப்படைக்காததற்கான காரணமும் அவற்றை வைத்துக்கொண்டு என்ன செய்யத் திட்டமிட்டார் என்பது குறித்தும் இன்னும் தெரியவில்லை.
சட்டவிரோதமாக ஆயுதம் ஏந்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்திலிருந்து 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்தது ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

