சிங்கப்பூரின் மேற்கு வட்டாரத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 400,000 பேர் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள், வளங்கள் மற்றும் சுயபரிசோதனைக் கருவிகளை எளிதில் பெற பதிவு செய்துள்ளனர்.
தேசிய பல்கலைக்கழக சுகாதார முறை (என்யுஎச்எஸ்), 2023 மே மாதம் தொடங்கி வைத்த ‘ஹெல்த் டுகெதர்’ நடவடிக்கை,1.14 மில்லியன் குடியிருப்பாளர்களை ஈர்ப்பதற்கான தனது இலக்கின் மூன்றில் ஒரு பகுதியை எட்டிவிட்டது.
ஜூரோங், கிளமெண்டி மற்றும் குவீன்ஸ்டவுன் உள்ளிட்ட வட்டாரங்களைச் சேர்ந்தோர் அந்நடவடிக்கையின் சேவைகளுக்குப் பதிவு செய்துள்ளனர்.
‘ஹெல்தியர் எஸ்ஜி’ திட்டத்தின் இலக்குகளை அடையத் தேவையான ஒட்டுமொத்த சமூக அணுகுமுறையை இந்நடவடிக்கை வழங்குவதாக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
சுவா சூ காங்கில் உள்ள தெக் வாய் சந்தையில் சனிக்கிழமை (மே 11) நடைபெற்ற சுகாதார விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், “நாம் சுகாதாரமாக இருப்பது மிகவும் முக்கியமானது,” என்றார்.
சுகாதார வாழ்க்கைமுறைக்கான சமூக ஆதரவைப் பேணவும் எல்லா சிங்கப்பூரர்களுக்கும் நம்பகமான பொது மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவர் சேவைகளை வழங்கவும் அரசாங்கம் விரும்புவதாகக் கூறினார் சுவா சூ காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு கான்.
‘ஹெல்த் டுகெதர்’ நடவடிக்கைக்குப் பதிவுசெய்ய ‘என்யுஎச்எஸ்’ கைப்பேசிச் செயலியை பொதுமக்கள் தங்களது திறன்பேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். திறன்பேசி இல்லாதவர்களும் செயலியைப் பெற உதவி தேவைப்படுவோரும் அடித்தள அமைப்புகளை நாடலாம்.
விரிவான சுகாதாரச் சேவை அம்சங்களை அந்தச் செயலியின் வாயிலாகப் பெறமுடியும்.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, சிங்கப்பூரின் மேற்கு வட்டாரத்தில் பொது மருத்துவர், குடும்ப மருத்துவர் இருக்கும் பகுதிகளையும் சிறப்புப் பராமரிப்புச் சேவைகள் கிடைக்கும் இடங்களையும் காட்டும் வழிகாட்டிக் குறிப்புகள் அதில் இருக்கும்.
அந்த வட்டாரத்தில் உள்ள 27 நாடாளுமன்றத் தொகுதிகளில் 60 சமூக சுகாதாரச் சாவடிகள் உள்ளன. அண்மையில் மே 7ஆம் தேதி இணைக்கப்பட்ட கிளமெண்டி வட்டார புதிய சாவடியும் அதனுள் அடங்கும்.
இந்த சமூக சுகாதாரச் சாவடிகளுக்குச் செல்ல ‘என்யுஎச்எஸ்’ செயலியில் பதிவுசெய்யலாம்.
சுவா சூ காங்கில் என்யுஎச்எஸ், மக்கள் கழகம் ஆகியன இணைந்து நடத்திய ‘ஹெல்த் டுகெதர்’ சுகாதார விழாவில் ஏறத்தாழ 1,200 குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
‘ஹெல்த் டுகெதர்’ நடவடிக்கையில் இடம்பெற்றுள்ள சமூகப் பங்காளி அமைப்புகள் அவ்விழாவில் அரங்குகளை அமைத்து இருந்தன.

