முதல் காலாண்டில் பதிவு நீக்கம் செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
மூன்று ஆண்டுகளில் ஆக அதிக எண்ணிக்கை
671e3f71-7855-4a5d-83a0-6d851659f7d5
கூடுதலான எண்ணிக்கையில் கார்கள் பதிவு நீக்கம் செய்யப்படும் வேளையில், வாகன உரிமைச் சான்றிதழ் ஒதுக்கீட்டு எண்ணிக்கை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் (2024) முதல் காலாண்டில் ஏறக்குறைய 9,604 கார்கள் பதிவு நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 72.9 விழுக்காடு அதிகம்.

2021ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்குப் பிறகு பதிவான ஆக அதிக எண்ணிக்கை இது. 2021ல் 10,468 கார்கள் பதிவு நீக்கம் செய்யப்பட்டன.

கார்கள் அதிக எண்ணிக்கையில் பதிவு நீக்கம் செய்யப்பட்டதால் புதிய வாகனங்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) ஒதுக்கீட்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பல கார்கள், பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் சிஓஇ உரிமைக் காலத்தை நீட்டித்துள்ள வேளையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த கார்களைப் பயன்படுத்தலாம் என்று மறுமதிப்பீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் அவ்வாறு உரிமைக் காலம் நீட்டிக்கப்பட்டது.

முதல் காலாண்டில் கிட்டத்தட்ட 776 கார்களுக்கு அவ்வாறு சிஓஇ நீட்டிக்கப்பட்டது. சென்ற ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்புநோக்க, அது 66.5 விழுக்காடு அதிகம்.

சிஓஇ சான்றிதழின் காலாவதித் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் வாகன உரிமையாளர்கள் கார்களை மறுமதிப்பீடு செய்வது அவசியம். ஒரு கார் பதிவு நீக்கம் செய்யப்பட்ட பிறகே சிஓஇ ஒதுக்கீட்டில் ஓர் எண்ணிக்கை கூடும்.

மறுமதிப்பீட்டுக்குப் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு சிஓஇ நீட்டிக்கப்பட்ட கார்களை அதன் பிறகு பதிவு நீக்கம் செய்வது கட்டாயம். 2019ல் அவ்வாறு நீட்டிக்கப்பட்ட 20,095 கார்கள் இந்த ஆண்டு பதிவு நீக்கம் செய்யப்படும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்