மலிவுக்கட்டண விமானச் சேவை வழங்கும் ஸ்கூட் நிறுவனம் அண்மையில் புதிதாக வாங்கிய எம்பிரேயர் இ190-இ2 ரக விமானம், மே 7ஆம் தேதி தாய்லாந்தின் கிராபி நகருக்கு அதன் முதல் சேவையை வழங்கியது.
கடந்த 20 ஆண்டுகளாக மிகப் பெரிய ரக விமானங்களை ஓட்டிய அனுபவம் பெற்ற 46 வயது விமானி கேப்டன் டேரியஸ் இயோ அதைச் செலுத்தினார்.
ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ320, போயிங்கின் 777 போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் 112 இருக்கைகளைக் கொண்ட இந்த விமானம் சிறியது. இருப்பினும் இந்த விமானமும் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பு வாய்ந்தது என்றார் அவர்.
பிரேசிலின் சாவ் ஹோஸ் டொஸ் கம்பொஸ் நகரிலிருந்து கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அது சிங்கப்பூர் வந்தடைந்தது.
விமானத்தில் இரு புறமும் ஒவ்வொரு வரிசையிலும் தலா இரண்டு இருக்கைகள் மட்டுமே அமைந்துள்ளன. நடு இருக்கை கிடையாது.
தற்போது இத்தகைய இரண்டு விமானங்கள் மட்டுமே ஸ்கூட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுப் பிற்பாதியில் மேலும் மூன்று விமானங்களும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மேலும் நான்கு விமானங்களும் சிங்கப்பூர் வந்துசேரும்.
முதலில் தென்கிழக்காசியாவின் ஆறு நகரங்களுக்கு இவ்விமானங்கள் சேவை வழங்கும் என்றும் பின்னர் அதை விரிவாக்கத் திட்டமிடுவதாகவும் நிறுவனம் சொன்னது.
எம்பிரேயர் இ190-இ2 ரக விமானங்கள் சேவையில் இணையுமுன், சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், 17 மாதங்கள் அதன் பாதுகாப்பு, தொழில்நுட்ப அம்சங்களை மதிப்பீடு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

