புதிய வீவக தளத்தில் மறுவிற்பனை வீடுகளை நேரடியாகப் பட்டியலிடலாம்

3 mins read
f3597693-25ea-4b3e-89f9-daf97da4ca1e
புதிய வசதி திங்கட்கிழமை (மே 13) முதல் நடப்புக்கு வருகிறது. - கோப்புப் படம்: சாவ்பாவ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளை விற்க விரும்பும் வீட்டு உரிமையாளர்கள் அல்லது அவர்களின் சொத்து முகவர்கள் விற்பனை அறிவிப்பை கழகத்தின் இணையவாசலில் நேரடியாக பட்டியலிடலாம்.

அதற்காக இணையவாசல் மேம்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த வசதி திங்கட்கிழமை (மே 13) முதல் நடப்புக்கு வருகிறது.

வீடுகளை விற்கும் அல்லது வாங்கும் நடைமுறையை ஒழுங்குபடுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று வீவக தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

“பாதுகாப்பான முறையில் சொத்துப் பரிவர்த்தனையை மேற்கொள்ள, மேம்படுத்தப்பட்ட இணையவாசல் கைகொடுக்கும். அத்துடன் சொத்து முகவர்களின் மேம்பட்ட சேவைகளையும் அதன்மூலம் பெறமுடியும்,” என்றும் கழகம் தெரிவித்து உள்ளது.

உண்மையான விற்பனைப் பட்டியலை உறுதிசெய்ய, கழகத்தில் பதிவுசெய்யப்பட்ட வீட்டை மட்டுமே விற்க வேண்டும் என்ற எண்ணத்தை விற்பனையாளர்கள் கொண்டிருக்க வேண்டும்.

அதேபோல, வீட்டை வாங்க விரும்புவோர் வீவக வீட்டுத் தகுதிக் கடிதம் (எச்எஃப்இ) பெற்றிருக்க வேண்டும்.

வீட்டை வாங்குவதற்கும் மானியங்களைப் பெறுவதற்குமான தகுதியும் நிதித் தெரிவுகளும் அந்தக் கடிதத்தில் இடம்பெற்று இருக்கும்.

வீட்டை விற்போருக்கு அந்த விவரங்கள் உதவும்.

இவ்வாறு செய்வது பயனாளர் அனுபவத்தை மேம்படுத்துவதோடு மறுவிற்பனை வீடுகளைப் பட்டியலிடும் சேவை வெளிப்படையாக நடைபெறுவதை உறுதிசெய்யும் என்றும் வீவக கூறியுள்ளது.

உண்மையில் வீட்டை வாங்கவும் விற்கவும் விரும்புவோருக்கு நம்பகமான பட்டியலை வழங்குவது அந்தச் சேவையின் நோக்கம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

மேலும், விற்பனைப் பட்டியலிடும் சேவை தற்போதைக்கு இலவசமாக வழங்கப்படுவதாகவும் கழகம் தெரிவித்து உள்ளது.

சேவை அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டதுமே வீட்டை வாங்குவோர் பட்டியலைப் பார்வையிட்டுப் பரிவர்த்தனைகளைத் தொடங்கலாம்.

இதற்கிடையே, இணையவாசல் பட்டியல் தொடர்பில் வீட்டை வாங்குவோரும் விற்போரும் செய்ய வேண்டியவற்றை கழகம் விளக்கி உள்ளது.

விற்போர்

கழகத்தில் பதிவுசெய்யப்பட்ட வீட்டை மட்டுமே விற்க வேண்டும் என்ற எண்ணத்தை வீட்டு உரிமையாளர்கள் கொண்டிருக்க வேண்டும். பட்டியலை நிர்வகிக்க தங்கள் சார்பாக சொத்து முகவரை அவர்கள் நியமிக்கலாம்.

பட்டியலில் வீட்டைச் சேர்த்ததும் அந்த வீடு தொடர்பான விவரங்கள் கழகத்தின் தரவுகளில் இருந்து தாமாக சேர்க்கப்பட்டுவிடும். முகவரி, வீடு அமைந்துள்ள தளம், வீட்டின் அளவு போன்ற விவரங்கள் அவை.

அவற்றுடன், விற்பனையாளர்கள் தங்கள் வீட்டின் படங்களையும் சில விவரங்களையும் சேர்த்தால் மட்டும் போதுமானதாக இருக்கும்.

விற்பனையாளர்கள் அறிவித்திருக்கும் விலை, அருகிலுள்ள அதேபோன்ற வீடு கடந்த ஆறு மாதங்களில் விற்கப்பட்ட விலையைக் காட்டிலும் குறைந்தபட்சம் 10 விழுக்காட்டுக்கு மேல் இருந்தால் அது பற்றி விற்பனையாளர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

ஒரு விற்பனையாளர் ஒரு வீட்டை மட்டுமே பட்டியலிட வேண்டும்.

வாங்குவோர்

வீடு வாங்க விரும்புவோர், கழக இணையவாசலில் மறுவிற்பனைக்குப் பட்டியலிடப்பட்ட வீடுகளைப் பார்க்கலாம். ஆயினும், கழக வீடுகளை வாங்குவதற்கான தகுதிக் கடிதம் இருந்தால் மட்டுமே விற்பனையாளர்களை அவர்கள் தொடர்புகொண்டு வீட்டை நேரில் பார்ப்பதற்கான நேரத்தை முடிவுசெய்ய இயலும்.

வீடு அமைந்திருக்கும் இடம், வீட்டின் வகை, எஞ்சி இருக்கும் குத்தகைக் காலம், இன ஒருங்கிணைப்புக் கொள்கையின்கீழ் வீட்டு உரிமையாளரின் இன விவரம், குடியுரிமை ஆகியவற்றோடு சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் விருப்பமான வீடுகளை அவர்கள் தேடலாம்.

குறிப்புச் சொற்கள்