சோதனைச்சாவடி விரிவாக்கப் பணிகளால் உயிரின வாழ்விடத்திற்குப் பாதிப்பில்லை

சோதனைச்சாவடி விரிவாக்கப் பணிகளால் உயிரின வாழ்விடத்திற்குப் பாதிப்பில்லை

1 mins read
fe95c964-27aa-4c6a-90fc-9db27a53ffbb
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை விரிவாக்கம் செய்ய ஏறத்தாழ 44 ஹெக்டர் நிலம் 2029ஆம் ஆண்டுக்குள் மீட்கப்பட உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி விரிவாக்கத்திற்கான நிலமீட்புப் பணிகளால் அப்பகுதியின் உயிரின வாழ்விடங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மண்டாய், சுங்கை பூலோ ஆகிய பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களின் வாழ்விடங்களில் எதிர்மறைத் தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்று தொழிற்பேட்டை மேம்பாட்டாளரான ஜூரோங் நகராண்மைக் கழகமும் (ஜேடிசி) குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையமும் தெரிவித்து உள்ளன.

மாறாக, நிலமீட்பு எதிரொலியாக நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றம், நிலமீட்பு வட்டாரத்தில் உள்ள சதுப்பு நிலத் தாவரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்றும் அவை தெரிவித்து உள்ளன.

மண்டாய் வட்டாரத்தின் சதுப்புநில மரக்கன்றுகள் வளர்ந்து அருகிலுள்ள பகுதிகளுக்குப் பரவினால் அது நீண்டகாலத்துக்கு சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படுவதை முன்னிட்டு ஜேடிசி நடத்திய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வை அவர்கள் அதற்கு மேற்கோள் காட்டினர்.

சுற்றுச்சூழல் தாக்கத்தைத் தணிக்க, தொடக்கத்தில் திட்டமிடப்பட்ட நிலமீட்புப் பகுதிகளின் அளவு குறைக்கப்பட உள்ளது.

நீரிணையின் கிழக்குப் பகுதியில் 30.2 ஹெக்டர் நிலத்தையும் மேற்குப் பகுதியில் 36.4 ஹெக்டர் நிலத்தையும் மீட்க இதற்கு முன்பு அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர்.

அது தற்போது குறைக்கப்பட்டு உள்ளது. கிழக்கு வட்டாரத்தில் 10 ஹெக்டர் நிலமும் மேற்குப் பகுதியில் 34 ஹெக்டர் நிலமும் மீட்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிலமீட்புப் பணிகளை இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கி 2029ஆம் ஆண்டுக்குள் முடிக்க அட்டவணை வகுக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்