2023ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பூல்ஸ் அமைப்பின் இணைய சூதாட்டத்தளம், ஜாக்பாட் இயந்திர சூதாட்ட அறைகள் ஆகியவற்றிலிருந்து கூடுதல் வெளிநாட்டு ஊழியர்கள் சுய விலக்கு கோரியுள்ளனர்.
இணையம் மூலம் சுய விலக்கு கோருவதைச் சூதாட்டப் பிரச்சினை தொடர்பான தேசிய மன்றம் எளிதாக்கியதை அடுத்து, சூதாட்டப் பழக்கத்திலிருந்து விடுபடவும் தவிர்க்கவும் தாங்களாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சூதாட்டத்திலிருந்து சுய விலக்கு கோரியுள்ளோர் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் இருமடங்கு அதிகரித்துள்ளது.
இந்த சுய விலக்கு முறை வாயிலாக சிங்கப்பூர் பூல்ஸ் கணக்கைத் திறப்பது அல்லது வைத்திருப்பது, தனியார் சூதாட்டக்கூடங்களில் உள்ள ஜாக்பாட் இயந்திர சூதாட்ட அறைக்குள் நுழைவது ஆகியவற்றைத் தவிர்க்க சுயமாகவே நடவடிக்கை எடுக்கலாம்.
2023ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பூல்ஸ் அமைப்பின் இணையம் மூலம் சூதாட்டத்தளத்திலிருந்து 19,038 பேர் சுய விலக்கு கோரியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது 2022ஆம் ஆண்டைவிட ஏறத்தாழ 118 விழுக்காடு அதிகம். அவ்வாண்டில் 8,731 பேர் சுய விலக்கு கோரியிருந்தனர்.
இந்தப் புள்ளிவிவரங்களை ஏப்ரல் மாதத்தில் மன்றம் வெளியிட்டது.
2023ஆம் ஆண்டில் ஜாக்பாட் இயந்திர சூதாட்ட அறைகளிலிருந்து 23,072 பேர் சுய விலக்கு கோரினர். 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ஏறத்தாழ 134 விழுக்காடு அதிகம். அவ்வாண்டில் 9,821 பேர் சுய விலக்கு கோரினர்.
சூதாட்டத்திலிருந்து சுய விலக்கு கோரும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை மன்றத்தின் செய்தித்தொடர்பாளர் திரு சிம் கிம் குவான் சுட்டினார்.
இது ஒரு நேர்மறையான போக்கு என்று அவர் வர்ணித்தார்.
மன்றத்தின் மின்னிலக்கமயமாதல் முயற்சிகளும் முதலாளிகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிட நடத்துநர்கள் ஆகியோருடன் இணைந்து செயல்படும் அணுகுமுறையும் இந்த அதிகரிப்புக்குக் காரணம் என்றார் அவர்.


