உலகின் முதல் தர நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூரை மேம்படுத்தி, பொன்விழாக் கொண்டாட வைத்த நாட்டின் மூன்றாவது பிரதமரான லீ சியன் லூங், 20 ஆண்டுகால தலைமைத்துவத்துக்குப் பிறகு திங்களன்று (மே 13) தமது பதவி விலகல் கடிதத்தை முறைப்படி அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் வழங்கினார்.
அதிபரிடம் கொடுக்கப்பட்ட கடிதத்தில், 72 வயதான திரு லீ, தாமும் தமது அரசாங்கமும் மே 15ஆம் தேதி பதவி விலகிக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் திரு லாரன்ஸ் வோங்கை அடுத்த அரசாங்கத்தை அமைக்க அழைக்குமாறு அதிபரை, பிரதமர் லீ முறைப்படி கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமர் லீயின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட அதிபர் தர்மன், அடுத்த அரசாங்கத்தை அமைக்க திரு வோங்குக்கு அழைப்பு விடுத்தார்.
அதிபரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட திரு வோங், தமது அமைச்சரவை உறுப்பினர்கள் பரிந்துரையை அதிபருக்கு அனுப்பியுள்ளார்.
திரு லாரன்ஸ் வோங் புதன்கிழமை (மே 15) இஸ்தானாவில் நடைபெறும் பதவியேற்புச் சடங்கில் சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பதவிப் பிரமானம் எடுத்துக்கொள்வார். அவருக்கு நியமனக் கடிதமும் வழங்கப்படும்.
மே 13ஆம் தேதி, அதிபரிடம் அளிக்கப்பட்ட கடிதத்தில், கவனமாகத் திட்டமிடப்பட்ட தலைமைத்துவ மாற்றம் குறித்து திரு லீ எழுதியுள்ளார்.
தமது 70வது வயதில் பிரதமர் பதவியைப் புதியவரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டதாகவும் ஆனால் கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால் அது முடியாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈராண்டுகளுக்கு முன்னர் திரு வோங்கை நான்காம் தலைமுறைத் ஒருமனதாக தேர்வு செய்தனர் என்றும் பிரதமர் பொறுப்பை ஏற்க அவர் இப்போது ஆயத்தமாகிவிட்டார் என்றும் அதிபருக்கு எழுதிய கடிதத்தில் திரு லீ கூறியுள்ளார்.
“எழுபது வயதாகும்போது புதிய தலைவரிடம் பொறுப்பை ஒப்படைக்க நான் முன்னதாகத் திட்டமிட்டிருந்ததை தாங்கள் அறிவீர்கள்.
“ஆனால், கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால் அந்தக் காலவரம்பு பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான திட்டத்தை மேற்கொண்டோம். மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2022 ஏப்ரல் 14ஆம் தேதி ஒன்றுகூடி, என்னிடம் இருந்து பொறுப்பை ஏற்கத் தகுந்த தலைவராக திரு லாரன்ஸ் வோங்கைத் தேர்வு செய்தனர்.
“ஈராண்டுகளுக்குப் பிறகு திரு வோங் சிங்கப்பூரை வழிநடத்த ஆயத்தமாகிவிட்டார்.
“பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் திரு வோங்கை அடுத்த அரசாங்கத்தை அமைக்க அழைக்குமாறு தங்களை முறைப்படி கேட்டுக்கொள்கிறேன்,” என்று அக்கடிதத்தில் பிரதமர் லீ குறிப்பிட்டிருந்தார்.