தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தோனீசியாவில் கால்பதிக்க அரசிடம் உதவிகோரும் சிங்கப்பூர் நிறுவனங்கள்

2 mins read
2319ee82-8151-4d62-a9ae-26a3178f6a83
2023 ஆம் ஆண்டில், இந்தோனீசிய திட்டங்களைப் பெற்ற சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாட்டு விற்பனையில் கிட்டத்தட்ட $111 மில்லியன் ஈட்டியுள்ளன என திருவாட்டி லிம் கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்

அதிகமான சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்தோனீசியச் சந்தையில் கால்பதிக்கவும் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கவும் அரசாங்க அமைப்பின் உதவியை நாடுகின்றன.

தென்கிழக்கு ஆசியாவின் வளர்ந்துவரும் பொருளியலைக் கொண்ட இந்தோனீசியாவில் இருக்கும் மிகப்பெரிய சந்தையாலும் அங்கு வரவிருக்கும் துறைகளாலும் ஈர்க்கப்பட்ட சிங்கப்பூர் நிறுவனங்கள் அந்த நாட்டில் முதலீடு செய்ய விரும்புகின்றன.

கடந்த ஆண்டு இந்தோனீசியாவில் தங்கள் வர்த்தகங்களை விரிவாக்கம் செய்ய 300 சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு ஆதரவளித்ததாக வர்த்தகங்களை அனைத்துலகமயமாக்க உதவும் அரசாங்க அமைப்பான எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.

முந்தைய இரண்டு ஆண்டுகளின் கூட்டு எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது கடந்த ஆண்டு இந்தோனீசியாவில் கால்பதித்த சிங்கப்பூர் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம் எனத் தென்கிழக்கு ஆசியாவிற்கான எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் இயக்குநர் லிம் ஜிங் ஜுன் கூறினார்.

2022ஆம் ஆண்டு 200 நிறுவனங்களும் 2021ஆம் ஆண்டு 100 நிறுவனங்களும் இந்தோனீசியாவில் தங்கள் வர்த்தகங்களை விரிவாக்கம் செய்தன என அவர் மேலும் தெரிவித்தார்.

சுகாதாரம், தொழில்துறை உள்கட்டமைப்பு, பசுமைப் பொருளியல், மின்னிலக்கப் பொருளியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை இந்தோனீசியாவில் விரிவாக்கம் செய்ய முனைப்புடன் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், 2023ஆம் ஆண்டில், இந்தோனீசியத் திட்டங்களைப் பெற்ற சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாட்டு விற்பனையில் கிட்டத்தட்ட $111 மில்லியன் ஈட்டியுள்ளன எனத் திருவாட்டி லிம் தெரிவித்தார்.

இந்தோனீசியாவும் சிங்கப்பூரும் பசுமைப் பொருளியல், மின்னிலக்கப் பொருளியல் போன்ற வளர்ந்துவரும் துறைகளில் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படும் என்று இவ்வாண்டு ஏப்ரல் 29ஆம் தேதி மேற்கு ஜாவாவில் உள்ள போகோரில் நடந்த சிங்கப்பூர்-இந்தோனீசியத் தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான வலுவான பொருளியல் ஒத்துழைப்பு இருதரப்பு அரசாங்கங்களுக்கிடையே இருக்கும் நெருக்கமான ஈடுபாட்டால் ஆதரிக்கப்படுகிறது என்று திருவாட்டி லிம் கூறினார்.

“எண்டர்பிரைஸ் எஸ்ஜி அமைப்பு, இந்தோனீசியாவின் பொருளியல் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய இந்தோனீசிய அரசாங்க அமைப்புகளுடன் நெருக்கமாகச் செயல்படுகிறது,” என அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்