பிரதமர் லீ சியன் லூங் தமது பதவி விலகல் கடிதத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் மே 13ஆம் தேதியன்று சமர்ப்பித்தார். தாமும் தமது அரசாங்கமும் மே 15ல் பதவி விலகுவதாக திரு லீ தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பெற்றிருப்பதாகவும் அவரையே சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக நியமிக்குமாறும் அதிபரைத் திரு லீ கேட்டுக்கொண்டார்.
பிரதமர் லீ சியன் லூங்கின் பதவி விலகல் கடிதத்தை அதிபர் தர்மன் ஏற்றுக்கொண்டார்.
கடந்த நாற்பது ஆண்டுகளாக நாட்டுக்குத் தன்னலமற்ற சேவையாற்றியதற்கு சிங்கப்பூரர்கள் சார்பாகப் பிரதமர் லீக்கு அதிபர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராகப் பதவி வகித்து நாட்டை சிறப்பான முறையில் திரு லீ வழிநடத்தியதை அதிபர் சுட்டினார்.
சிங்கப்பூரின் துடிப்புமிக்க பொருளியலைத் திரு லீ மேலும் மேம்படுத்தியதாக அதிபர் தர்மன் பாராட்டினார்.
சிங்கப்பூரர்களுக்குப் பல வாய்ப்புகளை வழங்கும் புதிய பாதைகளைத் திரு லீ திறந்துவிட்டதாகவும் சமுதாயத்தில் உள்ள அனைத்துப் பிரிவினர்களின் வாழ்க்கைத் தரத்தை அவர் உயர்த்தியதாகவும் அதிபர் தமது கடிதத்தில் தெரிவித்தார்.
அத்துடன், சமுகப் பாதுகாப்பையும் திரு லீ வலுப்படுத்தியதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் சுற்றுப்புறத்தை உருமாற்றியதுடன், பருவநிலை, நீடித்த நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான பாதையில் சிங்கப்பூரர்கள் செல்ல தேவையான நடவடிக்கைகளை திரு லீ எடுத்ததாக அதிபர் தர்மன் தெரிவித்தார்.
திரு லீ, அனைத்துலகச் சட்டங்களுக்கு உட்பட்டு உலக நாடுகள், மக்களின் நலம் கருதி நியாயமாகவும் கொள்கைப்பிடிப்புடனும் நடந்துகொள்ளும் கடப்பாட்டுடன் செயல்பட்டதாக அதிபர் கூறினார்.
இதன் மூலம் உலகளவில் சிங்கப்பூருக்கென்றே தனித்துவம் வாய்ந்த நற்பெயர் கிடைக்க பிரதமர் லீயின் பங்களிப்பு அளப்பரியது என்றார் அதிபர் தர்மன்.
“உங்கள் பதவிக்காலத்தில் உலக நாடுகளைச் சில நெருக்கடிநிலைகள் உலுக்கின. 2008 உலகளாவிய நிதி நெருக்கடிநிலை, கொவிட்-19 நெருக்கடிநிலை உள்ளிட்டவை அவற்றில் அடங்கும். ஒவ்வொரு நெருக்கடிநிலையின்போதும் ஒற்றுமையாக இருந்து அதைக் கடந்துவிடலாம் என்று சிங்கப்பூரர்களுக்கு நம்பிக்கையூட்டினீர்கள். உங்கள் தலைமையின்கீழ் நெருக்கடிநிலைகளை முறியடித்து சிங்கப்பூர் பிளவுபடாமல் மீண்டு வந்தது மட்டுமல்லாமல், கூடுதல் மீள்திறன் மற்றும் வலிமையுடன் உயிர்த்தெழுந்தது,” என்று அதிபர் தர்மன், திரு லீக்குப் புகழாரம் சூட்டினார்.
வேற்றுமைகளை ஏற்று அவற்றை இணைத்து நாட்டை வலுப்படுத்தும் அணுகுமுறையை திரு லீ செவ்வனே ஆற்றியதாக அதிபர் கூறினார்.
இன்று, சிங்கப்பூர் திறந்த மனப்பான்மையுடன் உள்ள நாடாக இருக்கும்போதிலும் மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதற்குத் திரு லீயின் தலைமைத்துவமும் வழிகாட்டுதலும் முக்கிய காரணம் என்றார் அவர்.
சிங்கப்பூரில் தலைமைத்துவ மாற்றம் சுமுகமாகவும் முறையாகவும் இருக்க வேண்டும் என்ற இலக்குடன் கடந்த பல ஆண்டுகளாக அடுத்த தலைமுறைத் தலைவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து அவர்களைப் பிரதமர் லீ செதுக்கியதாக அதிபர் தர்மன் தெரிவித்தார்.
“உங்களது கடமையுணர்ச்சி, நேர்மை, மதிநுட்பம், இரக்கக் குணம் ஆகியவை உயர் தரமானவை. அவற்றை எட்ட எதிர்காலத் தலைவர்கள் மிகவும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். நீங்கள் செயல்பட்ட விதம் மற்ற தலைவர்களுக்கு ஊக்குவிப்பாக அமையும்,” என்றார் அதிபர் தர்மன்.
சிங்கப்பூரை அடுத்த அத்தியாயத்துக்குக் கொண்டு செல்லும் புதிய தலைமைத்துவத்துக்குத் திரு லீயின் அனுபவமும் அறிவுரைகளும் நல்ல வழிகாட்டுதலாக அமையும் என்று கூறிய அதிபர், அவை மிகுந்த பலனைத் தரும் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, மே 15ஆம் தேதியன்று சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகப் பதவி ஏற்க இருக்கும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கும் அதிபர் தர்மன் மே 13ல் கடிதம் அனுப்பினார்.
“பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நீங்கள் பெற்றிருப்பதாக பிரதமர் லீ என்னிடம் தெரிவித்திருப்பதை நான் ஏற்கிறேன். மே 15ஆம் தேதியன்று உங்களை சிங்கப்பூரில் அடுத்த பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளேன். அடுத்த அரசாங்கத்தை அமைக்க உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். பிரதமர் என்கிற முறையில், கண்ணியமான முறையில் சிங்கப்பூரை நீங்கள் வழிநடத்துவீர்கள் என்றும் நாடு தொடர்ந்து நிலைத்தன்மையுடன் இருப்பதையும் துடிப்புடன் செயல்படுவதையும் உறுதி செய்வீர்கள் என்பதிலும் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது,” என்று திரு லாரன்ஸ் வோங்கிற்கு அனுப்பிய கடிதத்தில் அதிபர் தர்மன் தெரிவித்தார்.
அதிபர் தர்மனுக்கு அனுப்பிய கடிதத்தில் மே 15லிருந்து அரசாங்கப் பொறுப்பு வகிக்கவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றன.
பதவி உயர்வு பெறுவோரின் பெயர்களும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.
துணை அமைச்சர்கள் லோ யென் லிங்கும் டெஸ்மண்ட் டானும் மூத்த துணை அமைச்சர்களாகப் பதவி உயர்வு பெறுகின்றனர்.
திருவாட்டி ரஹாயு மஹ்ஸாம் தொடர்பு, தகவல் துணை அமைச்சராகப் பதவி உயர்வு பெறுகிறார். சுகாதார அமைச்சில் தமக்கு இருக்கும் பொறுப்புகளை அவர் தொடர்கிறார். சட்ட அமைச்சில் இருக்கும் பொறுப்புகளைக் கைவிடுகிறார்.
புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை சட்ட, போக்குவரத்து துணை அமைச்சராகப் பதவி உயர்வு பெறுகிறார்.
ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷோன் ஹுவாங் கல்வி, நிதி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
அரசாங்கப் பொறுப்பு வகிப்பவர்கள் அனைவருக்கும் மே 15ல் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
திரு முரளிக்கு மட்டும் ஜூலை 1ல் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்படும்.
மே 15ஆம் தேதியன்று மூத்த நாடாளுமன்றச் செயலாளர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு மே 24ல் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்படும்.