ஜூலை 8ஆம் தேதியிலிருந்து தொடர்பு, தகவல் அமைச்சு பெயர் மாற்றம் காண்கிறது.
அது தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு என்று அழைக்கப்படும்.
இந்தப் பெயர் மாற்றத்தைப் பிரதமர் அலுவலகம் மே 13ஆம் தேதியன்று அறிவித்தது.
“தேசிய மின்னிலக்கத் திட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் அமைச்சுக்கு இருக்கும் பங்கைப் புதிய பெயர் பிரதிபலிக்கிறது. தகவல் கொள்கை மற்றும் உத்திகள், ஊடக மேம்பாடு, மக்கள் தொடர்பு முயற்சிகள் ஆகியவற்றுக்கு அமைச்சு தொடர்ந்து பொறுப்பு வகிக்கும்,” என்று பிரதமர் அலுவலகம் கூறியது.
இது வெறும் பெயர் மாற்றம் இல்லை என்றும் மனப்போக்கு, நிலைப்பாடு ஆகியவற்றில் உள்ள பேரளவிலான மாற்றத்தை இது பிரதிபலிப்பதாகவும் புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்த மே 13ஆம் தேதியன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் மின்னிலக்கமயமாதல் முயற்சிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் அதைத் தீவிரப்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது என்றும் அமைச்சின் பெயர் மாற்றம் உணர்த்துகிறது என்று திரு வோங் கூறினார்.
“சிங்கப்பூரின் பொருளியலை உருமாற்றவும் சமுதாயத்தில் உள்ள அனைவரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் மின்னிலக்கத் தொழில்நுட்பம் பேரளவில் உதவும்,” என்று திரு வோங் கூறினார்.
சிங்கப்பூரின் தேசிய மின்னிலக்கமயமாதல் உத்திகளில் செயற்கை நுண்ணறிவும் பல துறைகள், அமைப்புகள் பயன்படுத்தும் மற்ற பல தொழில்நுட்பங்களும் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
“எனவே, ஒவ்வொன்றையும் தனித்தனியாக நடைமுறைப்படுத்தாமல் அனைத்து முயற்சிகளையும் தேசிய மின்னிலக்க உத்தியின்கீழ் கொண்டு வருவது நிர்வாக ரீதியில் சிறப்பாக இருக்கும் என்று கருதினோம்,” என்றார் திரு வோங்.
இதற்கிடையே, அமைச்சின் பெயர் மாற்றத்தைத் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ வரவேற்றுள்ளார்.
“புதிய தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு, சிங்கப்பூரின் மின்னிலக்கப் பொருளியலுடன் மின்னிலக்க மீள்திறன், மின்னிலக்கத் தயார்நிலை உள்ளிட்ட மின்னிலக்க ஆற்றல் கொண்ட சமுதாயத்துக்கான முக்கிய அம்சங்களையும் வலுப்படுத்தும்.
“இணையப் பாதுகாப்பு, மின்னிலக்க உள்கட்டமைப்புக்கான விதிமுறைகள், தரவுப் பாதுகாப்பு, இணைய உள்ளடக்கம் ஆகியவற்றுக்கு அமைச்சு பொறுப்பு வகிக்கும்.
“மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆற்றல்கள் நடைமுறைப்படுத்தப்படுவதையும் மேம்படுத்தப்படுவதையும் அமைச்சு தீவிரப்படுத்தும். அரசாங்கச் சேவைகளை மின்னிலக்கமயமாக்குவதும் இதில் அடங்கும்,” என்று அமைச்சர் டியோ தெரிவித்தார்.