தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துணைப் பிரதமர்கள் தேர்வு வோங்கின் பாதுகாப்பான அணுகுமுறை: அரசியல் ஆய்வாளர்கள்

2 mins read
e7ee9b64-b69f-47fb-bcd5-1e7e5e7aa594
(இடமிருந்து) திரு கான் கிம் யோங், திரு லாரன்ஸ் வோங், திரு ஹெங் சுவீ கியட். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

துணைப் பிரதமர்களாக அனுபவம் வாய்ந்த அமைச்சர்களை சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் லாரன்ஸ் வோங் தேர்ந்து எடுத்திருப்பது நாட்டுக்கும் மக்கள் செயல் கட்சிக்கும் (மசெக) பாதுகாப்பான அணுகுமுறை என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

புவிசார் அரசியல் நிலவும் வேளையிலும் பொருளியல் நிலவரம் நிச்சயமற்று இருக்கும் நிலையிலும் சிங்கப்பூரின் அடுத்த பொதுத் தேர்தல் 18 மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலையிலும் லீ சியன் லூங்கிடம் இருந்து லாரன்ஸ் வோங்கிற்கு பிரதமர் பொறுப்பை மாற்றும் நிகழ்வு நடைபெறுவதாக அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

புதன்கிழமை (மே 15) சிங்கப்பூரின் நான்காம் பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கும் திரு வோங், 51, நிதி அமைச்சராகத் தொடர்வார்.

திங்கட்கிழமை அவர் இரு துணைப் பிரதமர்களை அறிவித்தார். தற்போதைய துணைப் பிரதமர் 63 வயது ஹெங் சுவீ கியட்டுடன் 65 வயது வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் மற்றொரு துணைப் பிரதமராக சேர்க்கப்படுகிறார்.

திரு கானுக்கு பதவி உயர்வு கொடுத்து அனுபவம் வாய்ந்த இருவரை துணைப் பிரதமர்களாக வைத்திருப்பது சிங்கப்பூரின் ஆட்சிமுறையில் நிலவக்கூடிய நிச்சயமற்ற, கணிக்க இயலாத நிலைமையைத் தணிப்பதில் மையப்புள்ளியாகத் திகழும்.

சோலாரிஸ் ஸ்ட்ரேடஜிஸ் சிங்கப்பூர் என்னும் அமைப்பின் அனைத்துலக விவகாரப் பிரிவின் மூத்த பகுப்பாய்வாளர் டாக்டர் முஸ்தஃபா இஸுதீன் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு திரு லீ தமது முதல் அமைச்சரவையை அமைத்தபோது தம்மைவிட மூத்த இருவரை துணைப் பிரதமர்களாக நியமித்தார். டாக்டர் டோனி டான் கெங் யாம், பேராசிரியர் எஸ் ஜயகுமார் ஆகியோர் அந்த இருவர்.

இருப்பினும், தற்போதைய புதிய அமைச்சரவையில் திரு கானுக்கு அளிக்கப்பட்டு உள்ள வாய்ப்பு வியப்பை அளித்திருப்பதாக பல்வேறு கவனிப்பாளர்கள் கூறி உள்ளனர்.

திரு கான் தகுதியானவர், நன்கு அங்கீகரிக்கப்பட்டவர் என்றபோதிலும் தமது காலத்துடன் ஒத்த ஒருவரை திரு வோங் துணைப் பிரதமராக நியமிக்காதது, 4ஜி தலைமுறையில் அவரால் அப்படி ஒருவரைக் கண்டறிய இயலவில்லையா அல்லது ஒற்றுமைக் குறைபாடு உள்ளதா என்று வியப்படைவதற்கு வழிவகுக்கும் என்றார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் யூஜின் டான்.

மசெக தலைவராக இருந்த திரு கான் 2022 நவம்பர் மாதம் அந்தப் பதவியில் இருந்து விலகியதை கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் ஜில்லியன் கோ குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், ஆளும் கட்சியின் முடிவுகளை எடுக்கும் உயர்மட்டக் குழுவான மத்திய செயல்குழுவிலும் திரு கான் பொறுப்பு வகிக்கவில்லை.

2022 ஏப்ரல் மாதம் மசெகவின் 4ஜி குழுவின் தலைவராக திரு வோங் தேர்ந்து எடுக்கப்பட்டார். அத்துடன் மத்திய செயற்குழுவின் துணைத் தலைமைச் செயலாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்