தாம் வேலை செய்த நிறுவனத்துக்கு பாலியல் அச்சுறுத்தல் அடங்கிய மின்னஞ்சல் அனுப்பிய குற்றத்துக்காக 30 வயது ஆடவருக்கு ஆறு மாதம், ஆறு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
டோமி சோ ஹான் ஸுவென் எனப்படும் அவர், பீதியை ஏற்படுத்தும் நோக்கிலும் மற்றொருவரின் மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் நோக்கிலும் புண்படுத்தும் தகவலை அனுப்பியதாக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
இதர ஐந்து குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்பட்டபோது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
பாதிக்கப்பட்டோரின் அடையாளங்கள் நீதிமன்ற ஆணையால் பாதுகாப்படுகின்றன.
2020 ஏப்ரல் 29ஆம் தேதி முதல் விநியோக ஓட்டுநராக வேலை செய்த சோ, கைப்பேசிகளைத் திருடியதைத் தொடர்ந்து மூன்றே நாள்களில் வேலைநீக்கம் செய்யப்பட்டார்.
ஈராண்டுகளுக்குப் பின்னர் 2022 பிப்ரவரி 1ஆம் தேதி அவர் தமது வீட்டில் இருந்தபோது சொந்தப் பிரச்சினைகளால் ஆத்திரத்துடன் காணப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், $300 சம்பளப் பாக்கியை தமது நிறுவனம் தராதது பற்றி அவர் அதிருப்தியுடன் இருந்தார். அதனைத் தொடர்ந்து தமது நிறுவனத்துக்கு ‘அச்சுறுத்தல்’ என்று தலைப்பிட்டு இரு மின்னஞ்சல்களை சோ அனுப்பினார்.
நிறுவனத்தில் உள்ள எல்லாப் பெண் ஊழியர்களையும் பாலியல் பலாத்காரம் செய்யப்போவதாக அந்த மின்னஞ்சல்களில் அவர் மிரட்டி இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
மின்னஞ்சல்களைத் திறந்த அலுவலர் ஒருவர் அது குறித்து காவல்துறையிடம் புகார் செய்தார்.

