புகைமூட்டத்தை துல்லியமாகக் கணிக்க என்டியு ஆராய்ச்சியாளர்கள் சோதனை

புகைமூட்டத்தை துல்லியமாகக் கணிக்க என்டியு ஆராய்ச்சியாளர்கள் சோதனை

2 mins read
eba3890c-a131-4e2f-84ff-96dcf865071e
என்டியு புவி கண்காணிப்பகத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கருவி. - படம்: ஜெஃப்ரி என்சில்லோ, என்டியு சிங்கப்பூர்

புகைமூட்டம் ஏற்படுவதை முன்கூட்டியே கணிக்கும் வழிமுறை ஒன்றை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

வட்டாரங்களுக்கு இடையிலான மாசு மற்றும் புகைமூட்டத் துகள்களைக் கொண்டிருக்கும் மேற்பகுதி காற்றுமண்டலத்தைக் கண்காணிப்பதே அந்த வழிமுறை.

அதனைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் சிங்கப்பூரின் எந்தப் பகுதி புகைமூட்டத்தால் அதிகம் பாதிக்கப்படும் என்பதைக் கணிக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

தரையின் காற்றுமண்டலத்துக்கு மேல் அல்லது மக்கள் சுவாசிக்கும் காற்றுப் பகுதிக்கு உயரே உள்ளது மேற்புற காற்றுமண்டலம்.

வழக்கமாக, தரையின் காற்றுமண்டலத்தில் உள்ள காற்றின் தரத்தைக் கண்காணிப்பதிலேயே கவனம் செலுத்தப்படுகிறது.

“தரைமட்டத்தை மட்டும் கவனித்தால் எல்லைதாண்டிய புகைமூட்ட நிலவரத்தின் ஒட்டுமொத்த நிலவரத்தையும் நம்மால் புரிந்துகொள்ள இயலாது,” என்கிறார் என்டியு ஆசிய சுற்றுச்சூழல் கல்வி நிலையத்தின் இணைப் பேராசிரியர் ஸ்டீவ் யிம்.

என்டியு கண்காணிப்பு முறையை விளக்கிய அவர், “தூசுப்படலம் நிலத்திற்கு வந்திறங்கும் முன்னர், மேற்பகுதி காற்றுமண்டலத்தில் புகைமூட்டம் தோன்றுவதற்கான அறிகுறியை முன்கூட்டியே நம்மால் காண இயலும்.

“மேலும், செங்குத்தான காற்றின் வேகத்தை ஆய்வு செய்வதன் மூலம், எவ்வளவு வேகத்தில் புகைமூட்டம் நிலப்பகுதிக்கு வந்து சேரும் என்தையும் கணிக்க இயலும்,” என்றார்.

கண்காணிப்பு முறையை என்டியு கடந்த ஆண்டு சோதிக்கத் தொடங்கியது. என்டியு சிங்கப்பூரின் புவி கண்காணிப்பகத்தின் மேற்கூரையில் லிடார் என்னும் கருவி பொருத்தப்பட்டது.

2023 அக்டோபர் 6ஆம் தேதி இரவு அந்தக் கருவியின் சோதனை முறை தொடங்கியது. சுமத்ராவில் இருந்து சிங்கப்பூரை நோக்கி மாசு நிறைந்த பலத்த காற்று தென்கிழக்கு வட்டாரத்தில் வீசியதை அது கண்டறிந்தது.

மறுநாளான அக்டோபார் 7ஆம் தேதி தரையில் வீசிய காற்றில் புகைமூட்டத் துகள்கள் கலந்தன. அதனைத் தொடர்ந்து அன்று காலை காற்றில் மாசு கலந்து ஆரோக்கியமற்ற நிலை ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்