தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துணைப் பிரதமர் வோங்: எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைப்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றன்று

3 mins read
6efa8e6f-f9e2-4d0d-814c-7c4fe7e8ed1b
மே 15ல் பிரதமர் பதவி ஏற்க இருக்கும் திரு லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்போதெல்லாம் தேர்தல்களில் கடுமையான போட்டி நிலவுவதால் எதிர்க்கட்சிகள் போதுமான தொகுதிகளைக் கைப்பற்றி அரசாங்கம் அமைப்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றன்று என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு இடங்களைக் கைப்பற்றும் இலக்குடன் எதிர்க்கட்சிகள் உள்ளன என்பதை அவர் சுட்டினார்.

இந்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து 50 விழுக்காட்டுக்கும் அதிகமான இடங்களில் வெல்லும் சாத்தியம் இருப்பதாகவும் துணைப் பிரதமர் வோங் கூறினார்.

எந்த ஓர் எதிர்க்கட்சியையும் திரு வோங் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

இருப்பினும், மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளைக் கைப்பற்றுவதே தனது இலக்கு என்று பாட்டாளிக் கட்சி முன்பு தெரிவித்திருந்தது.

சிங்கப்பூரின் அடுத்த பொதுத் தேர்தலை 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் நடத்த வேண்டும்.

இம்முறை அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களமிறங்குவர் என்று தாம் நம்புவதாக மே 10ஆம் தேதியன்று அளித்த நேர்காணலின்போது திரு வோங் கூறினார்.

“பாட்டாளிக் கட்சியை மட்டும் போட்டியாகக் கருதாமல் மற்ற ஓரிரு எதிர்க்கட்சிகளையும் கருத்தில் கொண்டால், அடுத்த பொதுத் தேர்தலில் போட்டி இன்னும் கடுமையானதாக இருக்கும் பட்சத்தில், எது வேண்டுமானாலும் நடக்கலாம். மக்கள் செயல் கட்சி ஒரு சில விழுக்காட்டுப் புள்ளிகளை இழந்தாலும் இரண்டு அல்லது மூன்று எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து அரசாங்கம் அமைத்துவிட முடியும். இது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றன்று.

“எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 50 விழுக்காட்டுக்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றுவது சாத்தியமில்லை என்று கூறிவிட முடியாது. இதனால்தான் அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி வெற்றி பெறுவது உறுதி என்றும் தேர்தலுக்குப் பிறகு நான் நிச்சயமாகப் பிரதமராக இருப்பேன் என்றும் உறுதியாகக் கூறிவிட முடியாது,” என்று துணைப் பிரதமர் வோங் கூறினார்.

மே 15ஆம் தேதியன்று பிரதமர் பதவியைத் திரு வோங் ஏற்கிறார்.

அதற்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது இதுகுறித்து கருத்துரைத்தார்.

“ஒரு கட்சி மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் அரசியல் முறை இன்று சிங்கப்பூரில் கிடையாது. நாடாளுமன்றத்தில் பல்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் உள்ளனர். எந்த ஒரு விவகாரத்தையும் எடுத்துக்கொண்டால் அதுதொடர்பாகப் பலதரப்பட்ட கருத்துகள், பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன,” என்றார் திரு வோங்.

ஆனால், ஆளும் கட்சிக்கு முழு ஆட்சி அதிகாரம் வழங்கும் முறை அவசியம் என்று திரு வோங் வலியுறுத்தினார். அப்போதுதான் ஆட்சியைச் செவ்வனே, துரிதமான முறையில் நடத்த முடியும் என்றார் அவர்.

“இந்த அணுகுமுறையையே கட்டிக்காக்க விரும்புகிறோம். ஆளும் கட்சிக்கு முழு ஆட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அதன்மூலம் சிங்கப்பூரர்களின் நலன் கருதி ஆளும் கட்சியால் சிங்கப்பூரை ஆட்சி செய்ய முடியும்,” என்று திரு வோங் கூறினார்.

ஒருவேளை சிங்கப்பூரர்கள் எதிர்பார்க்கும் தரம் மக்கள் செயல் கட்சிக்கு இல்லாமல் மசெகவைவிட சிறப்பான ஆட்சியை வழங்கக்கூடிய கட்சி இருந்தால், அதற்கு முழு ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று திரு வோங் தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க, சிங்கப்பூரர்களின் அங்கீகாரம் மற்றும் நம்பிக்கையை மக்கள் செயல் கட்சி தொடர்ந்து பெற பிரதமர் மற்றும் மசெகவின் தலைமைச் செயலாளர் என்கிற முறையில் தம்மால் ஆன அனைத்தையும் செய்வது உறுதி என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்