சிங்கப்பூரின் நான்காம் பிரதமர் என்னும் பதவியை ஏற்பது தொடர்பான முடிவின்போது பேரளவிலான தமது வருங்காலப் பொறுப்புகள் பற்றியும் அவற்றுக்குத் தோள்கொடுக்க தாம் தயாராக இருக்கிறோமா என்பது பற்றியும் பரிசீலித்ததாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.
“கடந்த 2011ஆம் ஆண்டு அரசியலில் நுழைய நான் எடுத்த முடிவைப் போன்றதும் தொடர்ந்து அரசுப் பதவிகளில் நியமிக்கப்பட்டதைப் போன்றதும் அல்ல தற்போதைய தலைமைத்துவ மாற்றம்.
“ஏதோ ஓர் அமைச்சு, ஒரு குழுத்தொகுதி சம்பந்தப்பட்டது அல்ல,” என்று திரு வோங் கடந்த வெள்ளிக்கிழமை (மே 10) செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், “நாட்டிற்கு ஆற்றவேண்டிய கடமை பற்றியும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு கட்சியைக் கொண்டு செல்ல வேண்டியது பற்றியும் தற்போது பேசப்படுகிறது.
“இவை எனக்கு மிகப்பெரிய பொறுப்புகளாகத் தோன்றின. மேலும், நான் இவற்றுக்குத் தயாராக உள்ளேனா என்று என்னை நானே கேட்டுக்கொள்ள வேண்டி இருந்தது,” என்றார்.
அரசியலில் நுழைவது, பிரதமராக உயர்வது இந்த இரண்டைத் தேர்ந்து எடுப்பதில் உள்ள வித்தியாசங்கள் யாவை என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த திரு வோங், “இரண்டிலும் ஒன்றுமையும் வேற்றுமையும் உள்ளன,” என்றார்.
“பொதுச் சேவை உணர்வு எனக்குள் தொடர்ந்து நீடிப்பது ஒற்றுமை.
தொடர்புடைய செய்திகள்
“இது ஒரு மிகப்பெரிய முன்னேற்றப் பயணம் என்பது தெளிவாகத் தெரிவதே இரண்டுக்கும் நடுவிலான வேற்றுமை,” என்று குறிப்பிட்டார் அவர்.
தாம் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது எந்த மாதிரியான பதவிப் பொறுப்புகள் வருங்காலத்தில் தமக்குக் கிடைக்கும் என்பது பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிதி அமைச்சருமான திரு வோங், கடந்த 2011ஆம் ஆண்டு கல்வி, தற்காப்பு துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரது அமைச்சர் பயணம் அப்போது தொடங்கியது.
புதிய பதவிகளில் அமரும்போதெல்லாம் அதற்கான பணிகளுக்குத் தம்மை ஆயத்தப்படுத்திக்கொள்வதோடு அலுவலக நிர்வாகிகளுடன் இணைந்து ஓர் அரசு ஊழியராக திரு வோங் பணியாற்றுவார்.
மாறாக, பிரதமர் பொறுப்பு என்பது மிகப் பெரிய பொறுப்புகளைச் சுமக்கக்கூயது.
அது பற்றி விளக்கிய திரு வோங், “ஆமாம், பிரதமர் என்பவர் சமமானவர்களில் முதன்மையானவர். இருப்பினும், அவருக்கு மிகப்பெரிய பொறுப்புகள் இருப்பதையும் அவை என்ன மாதிரியானவை என்பதையும் எவை எவை சம்பந்தப்பட்டவை என்பதையும் நான் அறிந்திருக்கிறேன்,” என்றார்.
அரசாங்க உபகாரச் சம்பளத்துடன் அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்ற திரு வோங், படிப்பு முடிந்து சிங்கப்பூர் திரும்பியதும் வர்த்தக, தொழில் அமைச்சில் பொருளியலாளராக தமது பணியைத் தொடங்கினார்.