‘இஆர்பி 2.0’ கருவிகள் உலகத் தரத்தில் இல்லை: குற்றச்சாட்டை மறுக்கும் எல்டிஏ

2 mins read
552f4d6e-bbcd-41da-8bcc-bae72817a455
வெப்பநிலை, ஈரப்பதம் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் ‘இஆர்பி’ 2.0வுக்காகப் பொருத்தப்படும் கருவிகள் தேர்ச்சி பெற்றவை என எல்டிஏ எடுத்துரைத்தது.  - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செயற்கைக்கோள் வழி செயல்படும் மின்னிலக்க சாலைக் கட்டணம் (‘இஆர்பி’) 2.0வுக்காகப் பொருத்தப்படும் கருவிகள் உலகத் தரத்தில் இல்லை என எழுந்த குற்றச்சாட்டுகளை நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) மறுத்துள்ளது.

இஆர்பி 2.0வுக்காகப் பொருத்தப்படும் மின்னணுக் கருவிகள் அதற்குத் தொடர்புடைய அனைத்துலக அளவுகோல்களை எட்டியவை என்றும் அவற்றைச் சரியாகப் பொருத்தினால், அவை மிகவும் பாதுகாப்பானவை என்றும் மே 14ஆம் தேதி அறிக்கை ஒன்றில் எல்டிஏ தெரிவித்தது.

மேலும், அவை சிங்கப்பூரின் இயக்க சூழலுக்கு ஏற்றவை என்றும் அதில் எல்டிஏ கூறியது.

மின்னணுக் கருவிகளின் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கு உலகளவில் பரவலாகப் பயன்படுத்தப்டும் அனைத்துலக மின்தொழில்நுணுக்க ஆணையத்தின் ஐஈசி -60068 , ஐஈசி- 60529 ஆகிய தரநிலைகளுக்கு எதிராக இக்கருவிகள் சோதிக்கப்பட்டன என்று இணையக் கருத்துகளுக்குப் பதிலளித்தபோது எல்டிஏ குறிப்பிட்டது.

வெப்பநிலை, ஈரப்பதம் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் ‘இஆர்பி’ 2.0வுக்காகப் பொருத்தப்படும் கருவிகள் தேர்ச்சி பெற்றவை என எல்டிஏ எடுத்துரைத்தது.

சிங்கப்பூரின் சூழலுக்கு ஏற்ற நம்பகமான செயல்பாடுகளுக்கான வாகன மின்னணுவியல் ஆணை Q100 (AEC-Q100) இன் குறைந்தபட்சத் தரங்களை (‘இஆர்பி’) 2.0வுக்காகப் பொருத்தப்படும் கருவிகள் பூர்த்திச் செய்கின்றனவா எனப் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் சுவா கேள்வி எழுப்பினார்.

அக்கேள்விக்கு இம்மாதம் 8ஆம் தேதி போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் பதிலளித்தார்.

சிங்கப்பூரின் காலநிலைகளில் பயன்படுத்துவதற்கான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் விபத்துகளின்போது பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்தவும் இக்கருவிகள் மீது தொடர்ச்சியான சோதனைகள் செய்யப்பட்டதாகத் திரு சீ தனது பதிலில் தெரிவித்தார்.

அவர் அளித்த பதிலை எல்டிஏ தனது அறிக்கையில் வலியுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்