ஓய்வுநேரத்தில் மூன்று அம்சங்களில் கவனம்; மலாய், மாண்டரின் கற்பதில் ஆர்வம்

ஓய்வுநேரத்தில் மூன்று அம்சங்களில் கவனம்; மலாய், மாண்டரின் கற்பதில் ஆர்வம்

2 mins read
83a8bd8f-3b9d-461e-a387-0a54718bf8b7
கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பிரதமர் பதவி ஏற்க இருக்கும் 51 வயது துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூருக்குப் பணியாற்ற இருப்பது தொடர்பான தமது விருப்பங்களையும் காத்திருக்கும் சவால்கள் குறித்தும் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

அத்துடன், தமது சொந்த வாழ்க்கை பற்றியும் ஓய்வுநேரத்தைக் கழிப்பது குறித்தும் அவர் விவரித்தார்.

1. தலைவர்களின் சுயசரிதை, தொழில்நுட்பவியல் உள்ளிட்ட நூல்களைப் படிப்பார்

நிறைய படிக்கக்கூடியவர் திரு வோங். குறிப்பாக நடப்பு விவகாரங்கள் மற்றும் தாம் தெரிந்துகொள்ள விரும்பும் அம்சங்களை அவர் படிப்பது வழக்கம்.

அண்மையில், செயற்கை நுண்ணறிவு குறித்து படித்துத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார்.

உள்ளூர், வெளிநாட்டுத் தலைவர்களின் சுயசரிதையை அவர் விரும்பிப் படிப்பார். சிங்கப்பூரின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான எஸ் ராஜரத்தினம் பற்றி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பத்திரிகையாளருமான திருவாட்டி ஐரின் இங் எழுதிய ‘ராஜா’ என்ற புத்தகத்தின் ரசிகர் அவர்.

விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகத்தில் பொருளியல் இளநிலைப் பட்டமும் மிச்சிகன்-அன் அர்பார் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுநிலைப் பட்டமும் பெற்றவர் திரு வோங்.

“கல்லூரிப் படிப்பின்போது அமெரிக்க அதிபர்களின் அரசியல் தலைமைத்துவம் பற்றிய வகுப்புகளில் கலந்துகொள்வேன்.

“ஐசன்ஹோவர் பற்றிய புத்தகம் ஒன்றை படித்த நினைவு உள்ளது. தலைமைத்துவம் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் என்னுள் எப்போதும் ஒலித்துக்கொண்டு இருக்கும்,” என்று அவர் கூறினார்.

2. வாராந்தர மலாய் மொழி வகுப்பில் பங்கேற்றார்

அரசாங்க ஊழியராக இருந்தபோது மலாய் மொழியில் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசத் தொடங்கினார். இருப்பினும், 2022 ஜூன் மாதம் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் மலாய் கற்பிக்கும் வகுப்புகளில் தீவிர கவனம் செலுத்தினார். வாராந்தர மலாய் வகுப்புகளில் கலந்துகொண்ட அவர், சில நாள்களிலேயே அந்த மொழியில் பேசும் நம்பிக்கையைப் பெற்றார்.

“மலாய் மொழியில் என்னால் உரையாற்றவும் இயன்றால் சரளமாகவும் முழுமையாகவும் பேசமுடியும் என்று கருதுகிறேன். இருப்பினும், சிறப்பாகப் பேச முயன்று வருகிறேன்,” என்றார் திரு வோங்.

3. மாண்டரின் மொழியிலும் கவனம்

திரு வோங், கடந்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளாக சீன மொழி வகுப்புகளிலும் கலந்துகொண்டார். பள்ளிப் படிப்பின்போது மாண்டரின் கற்க சிரமப்பட்டதாக அவர் கூறினார்.

தமது நண்பர்களோடு ஒப்பிடுகையில் தமக்கு சிறப்பான முறையில் மாண்டரின் பேச முடியுமா என்பதில் தமக்குச் சந்தேகம் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து மாண்டரின் மொழியைப் பேசக்கூடிய குடும்பச் சூழலில் திரு வோங் வளரவில்லை. இருப்பினும், அந்த மொழிப் பாடத்தில் தீவிர கவனம் செலுத்திய அவர், அதனைப் படிக்கவும் எழுதவும் வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தினார்.

ஹேய்க் சிறுவர் தொடக்கப் பள்ளியில் திரு வோங் பயின்றபோது அதே பள்ளியில் அவரது தாயார் ஆசிரியராக வேலை செய்தார்.

பின்னர், தஞ்சோங் காத்தோங் உயர்நிலை தொழில்நுட்பப் பள்ளியிலும் விக்டோரியா தொடக்கக் கல்லூரியிலும் திரு வோங் படித்தார்.

வேலைக்கும் பயன்படும் என்பதால் காலப்போக்கில் மாண்டரினில் தொடர்ந்து பேச வேண்டும் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள அவர் விரும்பினார்.

குறிப்புச் சொற்கள்
லாரன்ஸ் வோங்