வேலைக்காக வெளிநாடு செல்ல மூன்றில் இரு ஊழியர்கள் தயார்: ஆய்வு

வேலைக்காக வெளிநாடு செல்ல மூன்றில் இரு ஊழியர்கள் தயார்: ஆய்வு

1 mins read
41677ad9-8e0e-47a7-ae51-d18ec3f1f21c
வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்யத் தயாராக இருக்கும் சிங்கப்பூர் ஊழியர்களில் 72 விழுக்காட்டினர் 30 வயதுக்கும் குறைவான இளம் நிபுணர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வேலை காரணமாக கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு சிங்கப்பூர் ஊழியர்கள் வெளிநாடு செல்லத் தயாராக இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அவர்களில் பலர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பணிபுரிய விரும்புகின்றனர்.

சீனா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் பணிபுரிய பலர் தயாராக உள்ளனர்.

மலேசியா, தாய்லாந்து போன்ற அண்டை நாடுகளிலும் வேலை செய்ய சிங்கப்பூர் ஊழியர்கள் பலர் தயாராக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்யத் தயாராக இருப்பதாக 2018ஆம் ஆண்டில் 87 விழுக்காட்டினர் தெரிவித்திருந்தனர்.

இது தற்போது 64 விழுக்காடாகச் சரிந்துள்ளது.

வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்யத் தயாராக இருக்கும் சிங்கப்பூர் ஊழியர்களில் 72 விழுக்காட்டினர் 30 வயதுக்கும் குறைவான இளம் நிபுணர்கள்.

ஆய்வின் முடிவுகளை ‘ஜோப்ஸ்திரீட் பை சீக்’ எனும் வேலை தொடர்பான இணையவாசல் மே 14ஆம் தேதியன்று வெளியிட்டது.

ஆய்வின் முடிவுகள் குறித்து ஆள்சேர்ப்பு நிறுவனமான ரேன்ஸ்டேட் சிங்கப்பூரின் தலைமை மேலாளர் திரு டேவிட் பிளாஸ்கோ கருத்து தெரிவித்தார்.

“கூடுதல் ஊதியம், வேலை தொடர்பிலான திருப்திநிலை, வேலை-வாழ்க்கை சமநிலை ஆகியவற்றுக்காக சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளில் வேலை தேடுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் கொவிட்-19 நெருக்கடிநிலை இதைப் பேரளவில் மாற்றியது. உள்ளூர் திறனாளர்களை ஈர்க்கவும் சிங்கப்பூர் ஊழியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்யும் போக்கைக் குறைக்கவும் பல உள்ளூர் நிறுவனங்கள் கூடுதல் சலுகைகளை வழங்குகின்றன. வேலை தொடர்பான பொறுப்புகளும் மறுவடிவமைக்கப்படுகின்றன,” என்று திரு பிளாஸ்கோ கூறினார்.

குறிப்புச் சொற்கள்