தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வழுக்கலாக இருந்த சரிவுப்பாதை; கட்டுப்பாடு இழந்து சுவரில் மோதிய கார்கள்

1 mins read
67454145-0fd9-4f57-9545-beca7420d230
சரிவுப்பாதையின் வளைவில் கார்கள் கட்டுப்பாடு இழந்து சுவரில் மோதின. குறைந்தது 10 கார்கள் சேதமடைந்தன. - படம்: யிபிங் ஆங்

கனமழை காரணமாக ஃபூனான் மால் கடைத்தொகுதியின் வாகன நிறுத்துமிடத்துக்கு இட்டுச் செல்லும் சரிவுப்பாதை வழுக்கலாக இருந்ததால் அதில் சென்ற குறைந்தது 10 கார்கள் கட்டுப்பாடு இழந்து சுவரில் மோதின.

இந்தச் சம்பவம் மே 14ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

சரிவுப்பாதையின் வளைவில் சென்றபோது கார்கள் கட்டுப்பாடு இழந்ததாகப் பாதிப்பட்ட கார்களின் ஓட்டுநர்கள் கூறினர்.

கார் மேற்கொண்டு நகராமல் இருக்க ‘பிரேக்’கை அழுத்தியும் பலனில்லாமல் போனதாக அவர்கள் தெரிவித்தனர்.

சரிவுப்பாதையின் சுவர் மீது மோதியதில் கார்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து கடைத்தொகுதியின் நிர்வாகத்திடம் பேச பாதிக்கப்பட்ட கார் ஓட்டுநர்கள் முடிவெடுத்தனர்.

ஆனால் நிர்வாகத்தினரிடம் பேச கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்ததாக அவர்கள் கூறினர்.

சம்பவம் குறித்து மே 14ஆம் தேதி மாலை தகவல் கிடைத்ததாக ஃபூனான் மால் கடைத்தொகுதியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட சரிவுப்பாதைக்குள் போக முடியாத படி, நார்த் பிரிட்ஜ் சாலையிலிருந்து வாகன நிறுத்துமிடத்துக்குள் நுழையும் இடத்தில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.

சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

“கடைத்தொகுதிக்கு வரும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை தருகிறோம். சம்பவம் நிகழ்ந்ததற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம்,” என்று கடைத்தொகுதியின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
விபத்து