இந்தோனீசிய ஆகாயப் படை தலைமை அதிகாரியின் அறிமுக வருகை

இந்தோனீசிய ஆகாயப் படை தலைமை அதிகாரியின் அறிமுக வருகை

1 mins read
7f8a8b1c-cca6-4ad4-9b62-2a6a202a6399
இந்தோனீசிய ஆகாயப் படை தலைமை மார்ஷல் முகம்மது டோனி ஹர்ஜோனோ (இடது) சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னைச் சந்தித்துப் பேசினார். - படம்: தற்காப்பு அமைச்சு

இந்தோனீசிய ஆகாயப் படையின் தலைமை அதிகாரி அறிமுகப் பயணமாக சிங்கப்பூர் வந்திருப்பதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்து உள்ளது.

ஆகாயப் படை தலைமை மார்ஷல் முகம்மது டோனி ஹர்ஜோனோ புதன்கிழமை (மே 15) சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னைச் சந்தித்துப் பேசினார்.

சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படைக்கும் இந்தோனீசிய ஆகாயப் படைக்கும் இடையிலான அணுக்க, நீண்டகால தற்காப்பு உறவை அப்போது இருவரும் மறுஉறுதிப்படுத்தினர்.

இரு நாட்டின் ஆகாயப் படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.

இங்கு இருநாள் (மே 14, 15) வருகை மேற்கொண்ட திரு டோனி, சிங்கப்பூர் தற்காப்புப் படைத் தலைவர் துணை அட்மிரல் ஆரோன் பெங்கையும் ஆகாயப் படைத் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் கெல்வின் ஃபானையும் சந்தித்து உரையாடினார்.

தொடர்ந்து, தற்காப்பு அமைச்சின் கௌரவ அணிவகுப்பை அவர்கள் பார்வையிட்டனர்.

எலாங் இந்தோபூரா போன்ற பயிற்சிகள், உயர்மட்ட அதிகாரிகளின் வருகை, நிபுணத்துவப் பரிமாற்றங்கள், நிபுணத்துவ வகுப்புகளில் ஒன்றில் மற்றொன்று கலந்துகொள்ளுதல் ஆகியன மூலம் இரு நாட்டின் ஆகாயப் படைகளும் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குவதோடு இருவழித் தொடர்பிலும் ஈடுபட்டு வருவதாக சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு கூறியது.

அதன் காரணமாக இருதரப்பு ஆகாயப் படை வீரர்கள் இடையிலான புரிந்துணர்வும் அணுக்க உறவுகளும் மேம்படுவதாகவும் அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்