பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதியின் தேர்தல் அதிகாரி தமிழர்

பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதியின் தேர்தல் அதிகாரி தமிழர்

2 mins read
a3ed0ed5-5d55-43a7-b8f2-d81aa10c9a6b
வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கத்திடம் தாக்கல் செய்த பின்னர் கரம் கூப்பி வணங்கும் பிரதமர் நரேந்திர மோடி. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அத்தொகுதியின் தேர்தல் அதிகாரியாக இருப்பவர் ஒரு தமிழர்.

சென்ற திங்கட்கிழமை அன்று பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கான மனுவைத் தாக்கல் செய்தார்.

அவருடன், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் மோடி மனுவின் பரிந்துரையாளர்கள் நால்வர் உடன் இருந்தனர். தனது இருக்கையில் அமர்ந்திருந்த ஆட்சியர் ராஜலிங்கம் முன்பாக நேராகச் சென்று பணிவுடன் நின்றார் பிரதமர் மோடி. தனது இருகரங்களைக் கூப்பி வணங்கியவர் தனது வேட்பு மனுவை ஆட்சியரிடம் அளித்தார்.

எஸ்.ராஜலிங்கம் ஒரு தமிழர் ஆவார்.

பிறகு பிரதமரின் மனுவை அமர்ந்தபடியே ஆட்சியர் ராஜலிங்கம் சரிபார்க்க, பிரதமர் மோடி அமைதியாக நின்றிருந்தார்.

இந்த நிகழ்வுக்குப் பின் தமிழரான ராஜலிங்கம் யார் என்ற தேடல் சமூக ஊடகங்களில் பரவியது.

தமிழகத்தின் தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சுப்பையா – மாலையம்மாள் தம்பதியரின் மூத்த மகன்தான் ராஜலிங்கம். திருச்சியில் ஆர்.இ.சி. அரசு பொறியியல் கல்லூரியின் வேதியியல் பிரிவில் 2003ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர். ஓசூரின் சன்பார்க் கெமிக்கல் நிறுவனத்தில் பணியாற்றினார். குடிமைப்பணி தேர்வை விரும்பி ஒரு வருடத்தில் தமது பணியை ராஜினாமா செய்தார்.

2006ஆம் ஆண்டில் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில் பணியை துவக்கினார். இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் குடிமைப் பணி தேர்வு எழுதினார். இதன் பயனாக 2009ல் ஐஏஎஸ் தேர்விலும் வெற்றி பெற்றார்.

தற்போது வாரணாசி மாவட்ட ஆட்சியராக ராஜலிங்கம் உள்ளார். அவரின் தலைமை நிர்வாகத்தில் கடந்த 2022 மற்றும் 2023ல் காசி தமிழ் சங்கம விழாக்கள் 2 முறை நடைபெற்றன.

பிரதமர் மோடியின் அபிமானத்தை ராஜலிங்கம் பெற்றுள்ளார். பல்வேறு கூட்டங்களில் பிரதமர் மோடி இவரை, ‘மிஸ்டர் ராஜலிங்கம்’ என்று பெயரைக் குறிப்பிட்டு அழைப்பது உண்டு. பிரதமர் மோடியின் வேட்பு மனுவின் பரிந்துரையாளர்கள் மிகவும் கவனத்துடன் பிரதமர் மோடியால் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக மொத்தம் 25 பரிந்துரையாளர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் முதலில் தேர்வு செய்யப்பட்டனர் என்று இந்து தமிழ் திசை தகவல் தெரிவித்தது.

இவர்களில் நால்வரை பிரதமர் மோடி இறுதி செய்தார். இவர்களில் முக்கியமானவராக ஆச்சார்யா கணேஷ்வர் சாஸ்திரி திராவிட் உள்ளார். இவர், அயோத்தியில் ராமர் கோயில் திறப்புக்கு நாள் குறித்த தலைமை பண்டிதர்.

வேட்பு மனுவை அதிகாரியான ராஜலிங்கத்திடம் ஒப்படைக்கும் பிரதமர் மோடி.
வேட்பு மனுவை அதிகாரியான ராஜலிங்கத்திடம் ஒப்படைக்கும் பிரதமர் மோடி. - படம்: இந்திய ஊடகம்
குறிப்புச் சொற்கள்