மே 15ஆம் தேதி புதன்கிழமையன்று இரவு 8.00 மணிக்கு சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக லாரன்ஸ் வோங் இஸ்தானா அதிபர் மாளிகைத் திடலில் பதவியேற்றார்.
இந்த பதவியேற்பு நிகழ்வை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேரடி வலைத்தளத்திலும் யூடியூப் ஒளிவழியிலும் 7.45 மணி முதல் கண்டனர். சிங்கப்பூரின் முதல் அமைச்சரவை 1959ஆம் ஆண்டு நகர மண்டபத்தில் பதவியேற்றபோது அது பொதுமக்கள் பார்வைக்கு அப்பால் திரைமறைவில் நடைபெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை பதவியேற்பு நிகழ்ச்சி எந்த அளவுக்கு மாற்றம் கண்டுள்ளது என்பதை இங்கு காண்போம்.
மக்கள் செயல் கட்சி 1959ஆம் ஆண்டில் மகத்தான வெற்றி பெற்று சுய ஆட்சி பெற்ற சிங்கப்பூரின் முதல் அமைச்சரவை பதவியேற்றபோது அது நகர மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்கு அப்பால் திரைமறைவில் நடைபெற்றது.
அந்த ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி பிற்பகல் 4.00 மணிக்கு திரு லீ குவான் யூவும் அவரது அமைச்சரவையைச் சேர்ந்த எண்மரும் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அன்று அவர்கள் அனைவரும், அமைச்சர்கள் வழக்கமாக அணியும் ஆடம்பர ஆடைக்கு பதிலாக, கட்சியின் வெள்ளை நிற ஆடையில் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நேர்மை, ஊழலற்ற ஆட்சியைப் பிரதிபலிக்கும் விதமாக அவர்கள் வெள்ளை ஆடையில் பதவியேற்றனர்.
இதற்கு நேர்மாறாக, சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமரான கோ சோக் டோங்கின் 13 பேர் கொண்ட அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்ச்சி நகர மண்டபத்தில் 1990ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி ஆடம்பர நிகழ்வாக அமைந்தது.
அன்று இரவு சுமார் 7.45 மணியிலிருந்து துணைப் பிரதமர்கள், பதவி விலகிய, பதவியேற்க இருந்த பிரதமர், குடியரசின் நான்காம் அதிபர் வீ கிம் வீ ஆகியோர் வருகை புரிந்தனர். பதவியேற்பு நிகழ்வை சிறப்பிக்க நகர மண்டபத்தில் 300 செடிகள் நடப்பட்டன.
தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாக காண்பிக்கப்பட்ட அந்த பதவியேற்பு நிகழ்ச்சி, நாட்டின் தேசிய கீதமான மாஜுலா சிங்கப்பூராவுடன் தொடங்கியது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமரான லீ சியன் லூங்கின் பதவியேற்பு நிகழ்ச்சி இஸ்தானாவில் இடம்பெற்றது. திரு லீ சியன் லூங்கிற்கு முந்திய பிரதமர்கள் இஸ்தானாவில் இருந்து அரசுப் பணிகளை கவனித்ததாலும் அமைச்சரவைக் கூட்டங்கள் இஸ்தானாவிலேயே நடைபெறுவதாலும் பதவியேற்பு நிகழ்ச்சி அங்கு இடம்பெறுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதப்பட்டது.
அத்துடன், அந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தால் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. சிங்கப்பூர் வரலாற்றில் பொதுமக்கள் கலந்துகொண்ட அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி அதுவே முதன் முதலானது.
உணவு அங்காடிக் கடைக்காரர்கள், டாக்சி ஓட்டுநர்கள், தாதியர், திடல்தட வீரர்கள், சிங்கப்பூர் சமுதாயத்தின் மற்ற பிரதிநிதிகள் என கிட்டத்தட்ட 1,400 பேர் 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி திரு லீ சியன் லூங்கின் பதவியேற்பில் பங்கேற்றனர்.
இருபது பேர் கொண்ட அப்போதைய ஆகப் பெரிய அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்ச்சி வருகையாளர்கள் காணும் வகையில் இஸ்தானா திடலில் இடம்பெற்றது.