சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக லாரன்ஸ் வோங் பதவியேற்றார்

1 mins read
29fbee8f-d191-4ac0-af14-315f6033742e
தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் முன்னிலையில் பிரதமர் பற்றுறுதி எடுத்தார் லாரன்ஸ் வோங்.  - படம்: ராய்ட்டர்ஸ்

அமைதியுடனும் நிதானமாகவும் காணப்பட்ட திரு லாரன்ஸ் வோங், அடர் நீல நிற உடை அணிந்து, தனது வலது கையை உயர்த்தி, சிங்கப்பூரின் பிரதமராக தனது கடமைகளை எப்போதும் உண்மையாக நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்தார்.

எந்தவித சலுகைகளும் அளிக்காமல், அச்சமின்றி விருப்புவெறுப்பின்றி தனது அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ப கடமைகளை நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்தார்.

தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் முன்னிலையில் பிரதமர் பற்றுறுதி எடுத்தார்.

அதிபர் தர்மன் சண்முகரத்தினம், திரு வோங்கை பிரதமராக அதிகாரபூர்வமாக அறிவித்து, நியமனக் கடிதத்தை அவரிடம் கையளித்தார்.

அதிபர் தர்மன் திரு வோங்குடன் சில வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டார்.

பிரதமரின் பதவியேற்பைத் தொடர்ந்து துணைப் பிரதமர்களாக கான் கிம் யோங், ஹெங் சுவீ கியட் இருவரும் பதவியேற்றனர். மூத்த அமைச்சர்களாக லீ சியன் லூங்கும் டியோ சீ ஹியனும் பதவியேற்றனர். தொடர்ந்து மற்ற அமைச்சர்களுக்கு அதிபர் தர்மன் பதவி நியமனக் கடிதங்களை வழங்கினார்.

அதிபர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தூதர்கள், முன்னணி சுகாதார, போக்குவரத்து ஊழியர்கள், சமயத் தலைவர்கள், அடித்தளத் தலைவர்கள், வணிகத் தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், சமூகக் குழுக்கள், சமூகத் தொண்டர்கள் உள்பட கிட்டத்தட்ட 900 பேர் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்