ஒற்றுமை, ஊழலின்மை, நன்னடத்தை ஆகியவற்றில் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் உயர்தரம் கட்டிக்காக்கப்படும் என்றும் அதில் எந்த ஒரு சரிவும் ஏற்படுவதை அனுமதிக்க இயலாது என்றும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்து உள்ளார்.
சிங்கப்பூரின் நான்காம் பிரதமராக லாரன்ஸ் வோங்கிற்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்த நிகழ்வில் அதிபர் உரையாற்றினார்.
சிங்கப்பூரை வழிநடத்திச் செல்வதில் திரு வோங்கின் திறமை மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாக திரு தர்மன் குறிப்பிட்டார். நாட்டின் பொருளியல் மற்றும் சமூகக் கொள்கைகளை வடிவமைப்பதில் திரு வோங்கிற்கு முக்கியப் பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
திரு தர்மன் மேலும் கூறுகையில், “சிங்கப்பூரின் மூன்றாம் பிரதமரிடம் இருந்து நான்காம் பிரதமருக்கு தலைமைத்துவத்தை மாற்றிவிடும் நிகழ்வு அரங்கேறி இருக்கும் நிலையில் சிங்கப்பூர் வரலாற்றின் புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
“நாட்டிற்கு ஆற்றிய அர்ப்பணிப்புச் சேவைக்காகவும் இருபது ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்த அவரது தனித்துவத் தலைமைத்துவத்துக்காகவும் திரு லீ சியன் லூங்கிற்கு எல்லா சிங்கப்பூரர்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
“2004ஆம் ஆண்டு பதவி ஏற்றபோது எவரும் பின்தங்கிவிடாமல் எல்லா சிங்கப்பூரர்களுக்குமான பிரதமராக இருப்பேன் என்று திரு லீ உறுதி அளித்தார். அந்த உறுதியை அவர் நிறைவேற்றி இருக்கிறார்.
“தற்போது சிங்கப்பூரின் பொருளியல் உருமாறி இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் நல்ல வேலைகள் உள்ளன. ஊழியரணிக்கு இடையிலான வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது.
“எல்லாரையும் உள்ளடக்கிய சமூகத்தைக் கொண்டுள்ளோம். குழந்தைகள் சிறப்பான முறையில் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும், முதியோர் அமைதியான முறையில் வாழ்க்கையைக் கழிக்கும் நிலை உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“வருவாய் ஏற்றத்தாழ்வு தணிந்துள்ளது. ஒவ்வொரு பிரிவினரையும் முன்னேற்றிவிடுவதில் அரசாங்கத்துடன் சமூகத்தின் பங்களிப்பும் விரிவடைந்துள்ளது.
“உலக நிதி நெருக்கடியின்போதும் கொவிட்-19 பெருந்தொற்று காலத்திலும் மக்களின் உணர்வு மங்கிவிடாமல் திரு லீ பாதுகாத்தார். இவ்விரு பெரிய நெருக்கடிகளும் உலகின் பல சமூகங்களைப் பிளவுபடுத்திவிட்டன.
“எல்லாவற்றிற்கும் மேலாக, திரு லீ நிலைநிறுத்திய, வலுப்படுத்திய நெறிமுறைகள் மற்றும் தரநிலைகள் அவரது மிக முக்கியமான மரபை வரையறுக்கின்றன.
“அறுபது ஆண்டுகால சிங்கப்பூர் வரலாற்றில் இதற்கு முன்னர் மூன்று முறை மட்டுமே தலைமைத்துவம் மாற்றம் கண்டு உள்ளது. அந்த வரிசையில் சிங்கப்பூர் அரசியல் தலைமைத்துவத்தில் மீண்டும் ஒரு சுமுகமான மாற்றம் நிகழ்ந்து உள்ளது.
“அரசியல் நிலைத்தன்மை சிங்கப்பூருக்குப் பலனளித்து உள்ளது. அதன் காரணமாக நீண்டகாலத் திட்டங்களை அரசாங்கத்தால் வகுக்க முடிகிறது. புதிய தலைமைத்துவக் குழு, கால மாற்றத்திற்கு ஏற்ப கொள்கைகளைச் சரிசெய்யவும் அது உதவுகிறது.
“புதிய குழுவில் அனுபவம் வாய்ந்தவர்களும் நான்காம் தலைமுறை அமைச்சர்களும் உள்ளனர். கணிக்கமுடியாத தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் சிங்கப்பூரின் தேசிய நலன்களைப் பாதுகாக்கக்கூடிய திறன் அந்தக் குழுவுக்கு உள்ளது,” என்று திரு தர்மன் தமது உரையில் குறிப்பிட்டார்.