தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரதமராக லாரன்ஸ் வோங்கின் முதல் உரை

4 mins read
ec550414-a822-40fe-8a32-6f7d69999148
பிரதமராகப் பதவியேற்றபோது பற்றுறுதி எடுத்துக்கொண்ட திரு லாரன்ஸ் வோங். - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டபின் திரு லாரன்ஸ் வோங் ஆற்றிய உரையின் சுருக்கம் இங்கே தரப்பட்டுள்ளது:

“எங்கள் அதிபர், சக அமைச்சர்கள், நண்பர்கள், சக சிங்கப்பூரர்களே!

“சிங்கப்பூர் பிரதமராகப் பதவியேற்பதில் தான் மிகுந்த பெருமிதம்கொள்கிறேன்.

“இன்று, எல்லாத் தரப்பு சிங்கப்பூரர்களுடனும் இணைந்துள்ளோம்.

“உங்கள் ஆதரவையும் நம்பிக்கையையும் வேண்டுகிறேன்.

“சிங்கப்பூருக்கும் சிங்கப்பூர் மக்களுக்கும் சேவையாற்ற நானும் என் குழுவினரும் தங்களால் ஆன அளவிற்குச் சிறப்புடன் செயல்படுவோம்.

“இன்றைய நாள் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது. சிங்கப்பூர் விடுதலை அடைந்தபின் பிறந்த ஒருவர் நாட்டின் பிரதமராவது இதுவே முதன்முறை. என் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களில் பெரும்பாலோர் 1965ஆம் ஆண்டிற்குப்பின் பிறந்தவர்கள்.

“ஊழலின்மை, தகுதிக்கு முன்னுரிமை, பல்லினத்துவம், நீதி, சமத்துவம் ஆகிய பண்புகளால் நம் நாடு உருவாகியுள்ளதற்கு நம் வாழ்க்கையே சான்று. அவை நம் எல்லாரிடத்திலும் வேரூன்றியுள்ளன.

“நல்ல தலைமைத்துவம், அரசியல் நிலைத்தன்மை, நீண்டகாலத் திட்டமிடலின் மிகுந்த முக்கியத்துவத்தை அறிந்துள்ளோம். எங்கள் தலைமைத்துவப் பாணி, முந்திய தலைமுறைகளைவிட மாறுபட்டு இருக்கும். எங்கள் வழியில் நாங்கள் நடைபோடுவோம். எங்கள் எண்ணமும் தொடர்ந்து துணிவுமிக்கதாகவும் தொலைநோக்குடனும் இருக்கும்.

“இன்னும் செய்ய வேண்டியது ஏராளம் உள்ளது. ஏராளமான பக்கங்களை எழுத வேண்டியுள்ளது. சிங்கப்பூரின் சிறந்த அத்தியாயங்கள் முன்னே உள்ளன.

“அடுத்த அத்தியாயங்களை எழுதும்போது, புதிதாக ஒரு புள்ளியிலிருந்து தொடங்கப்போவதில்லை. நாங்கள் பெருந்தலைவர்களின் தோள்கள்மீது நிற்கிறோம்.

“திரு லீ குவான் இயூவும் அவர்தம் குழுவினரும் விடுதலை மூலம் நம்மை வழிநடத்தி, ஆட்சி நிர்வாகத்தின் முக்கியத் தூண்களை நிறுவினர். திரு கோ சோக் சோங்கும் அவரின் குழுவினரும் நம்மை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்று, கனிவான, மென்மையான சமூகத்தை உருவாக்கினர்.

“இன்று, திரு லீ சியன் லூங்கிற்கு நமது நன்றிக்கடனைப் பதிவுசெய்கிறேன். கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக் காலம் பொது வாழ்க்கையில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டவர் அவர்.

“அவரது தலைமைத்துவத்தின்கீழ் சிங்கப்பூர் பல மாற்றங்களைக் கண்டது; பல நெருக்கடிகளை வெற்றிகரமாகக் கடந்தது.

“திரு லீயும் அனுபவமிக்க அமைச்சர்களும் என் அமைச்சரவையில் பங்கேற்று சேவையாற்ற இருப்பதற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

“30, 40 வயதுகளில் இருக்கும் சிங்கப்பூர் இளையர்களை அடையாளம் கண்டு, அவர்களை எங்கள் குழுவில் சேர்க்க முன்னுரிமை அளிப்பேன்.

“சிங்கப்பூரின் நிலை வலுவாக உள்ளது, ஆனால், நம்மைச் சுற்றியுள்ள உலகம் நிலையில்லாததாக உள்ளது.

“பனிப்போருக்குப் பிறகு முப்பதாண்டுகளாக ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் நீடித்தது. துரதிர்ஷ்டவசமாக, அந்தக் காலம் முடிந்துவிட்டது. அது திரும்பாது. இப்போது நாம் போட்டியும் பூசலும் உள்ள உலகில் இருக்கிறோம். வல்லரசுகள் புதிய, இன்னும் வரையறுக்கப்படாத அனைத்துலக நிலையை உருக்கொடுக்கப் போட்டியிடுகின்றன. புவிசார் அரசியல் பதற்றங்கள், தன்னைப்பேணித்தனம் போன்றவற்றால் எல்லா இடங்களிலும் அம்மாற்றம் இடம்பெறலாம். அது பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

“பன்முகத்துவம் உடையும்போது, ஒரு சிறிய நாடாக, திறந்த பொருளியலைக் கொண்டுள்ள நாடாக, நமது வாழ்வாதாரங்களும் பாதிக்கப்படலாம்.

“இப்புதிய நடைமுறைச் சூழல்களை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப நாம் மாறிக்கொள்ள வேண்டும்.

“அதிர்ஷ்டவசமாக, அனைத்துலக அளவில் சிங்கப்பூரின் மதிப்பு உயர்ந்த நிலையிலுள்ளது. சிங்கப்பூர் வியந்து பார்க்கப்படுகிறது.

“நாம் எல்லாருடனும் நட்பு பாராட்ட விரும்புகிறோம்; அதே நேரத்தில் நமது உரிமைகளையும் நலன்களையும் நிலைநிறுத்துவோம். அமெரிக்கா, சீனா என்ற இரு வல்லரசுகளுடனும் தொடர்ந்து இணைந்து செயலாற்றுவோம். அண்டை நாடுகளுடனும் தொலைவிலுள்ள நாடுகளுடனும் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவோம்.

“கடுமையான புறச்சூழல்களை சிங்கப்பூர் கடந்து வந்துள்ளது. பரஸ்பர நம்பிக்கையும் நன்கு இணைந்து செயல்படும் நம் திறமையுமே அதற்கு முக்கியக் காரணம்.

“சிங்கப்பூர் பல இன, சமய, மொழி பேசும் மக்களைக் கொண்ட நாடு. இருப்பினும், ஒரே மக்களாக நமது பிணைப்புகளை வலுப்படுத்தியுள்ளோம்.

“பரஸ்பர மரியாதையும் நம்பிக்கையும் கொண்ட சூழலை நாம் எப்போதும் கொண்டுள்ளோம். இந்தப் பண்புநெறிகளே என்னையும் என் குழுவையும் வழிநடத்தும். அவ்வழியில் சிங்கப்பூர் அடையாளத்தைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம்.

“இன, சமய, மொழி பேதமின்றி, நாம் ஒரே மக்களாக ஒற்றுமையுடன் திகழ்வதாலும் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கையாலுமே நம்மால் கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொண்டு மீள முடிந்தது.

“இன்று, மற்ற நாடுகளை ஒப்புநோக்க, சிங்கப்பூர் உயர்ந்த பொருளியல் நிலையில் உள்ளது. சிறந்த கல்வி, வீடமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு, போக்குவரத்துக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளோம். ஆயினும், நமது சூழல் மாறுகிறது; தொழில்நுட்பம் முன்னேற்றம் காண்கிறது; நமது மக்கள்தொகை வேகமாக மூப்படைந்து வருகிறது.

“அதனால், நாம் அப்படியே செல்லலாகாது. சிங்கப்பூரை மேம்படுத்தவும் உருமாற்றவும் நம்மாலானவற்றைச் செய்வதைத் தொடரவேண்டும். நம்மால் முடியும் என உறுதியாக நம்புகிறேன்.

“அதனால்தான் முன்னோக்கிய சிங்கப்பூர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். பலரது கருத்துகளையும் அறிந்து, நமது எதிர்காலத்திற்கான தொலைநோக்கை வகுத்துள்ளோம்.

“இளம் சிங்கப்பூரர்கள், பொருள்ரீதியான வெற்றி மட்டுமின்றி, அர்த்தமுள்ள வாழ்க்கையையும் வாழ்க்கைத்தொழிலையும் வழங்கும் சிங்கப்பூரை உருவாக்க விரும்புகின்றனர். அதனை எட்டுவதற்கு ஆக்ககரமான, புதுமையான வழிமுறைகளைக் கண்டறிவோம்.

“நியாயமான, நேர்மையான, சமத்துவமிக்க சமுதாயத்தை வளர்த்தெடுப்போம். முதியவர்களையும் சிறப்புத் தேவை உடையவர்களையும் பார்த்துக்கொள்வோம்.

வாழ்க்கை, வயது, திறமையில் தொடக்கப்புள்ளி எதுவாக இருந்தாலும், தாங்களே தங்களைக் கைதூக்கிவிட்டு, நிறைவான வாழ்க்கையை வாழ எல்லாச் சிங்கப்பூரர்களுக்கும் ஆதரவளிப்போம்.

“சிங்கப்பூரர்களுக்கு நான் அளிக்கும் உறுதிமொழி இதுதான் - முழு மனத்தோடு சேவையாற்றுவேன். இப்போதுள்ள நிலையிலேயே தேங்கிவிட மாட்டேன். இன்றைய நாளைக் காட்டிலும் மறுநாளைச் சிறப்பானதாக ஆக்கும் வழிகளை எப்போதும் நாடுவேன்.

“நமது இந்தப் பயணத்தில் என்னுடனும் என் குழுவினருடனும் இணையும்படி சக சிங்கப்பூரர்களைம் கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொருவர்க்கும் பங்குண்டு. நமது எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொருவரும் முக்கியப் பங்காற்றலாம். பொதுவான நோக்கத்துடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிங்கப்பூரை முன்னேற்றுவோம்.

குறிப்புச் சொற்கள்