போக்குவரத்துக் காவல் அதிகாரி ஒருவர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த சமயம், அவரிடமிருந்து 22 வயது ஆடவர் தப்பியோட முயற்சி செய்து கைதான சம்பவம் மே 15ஆம் தேதி காலை நிகழ்ந்தது.
அதையடுத்து ஆடவரின் காரில் கறுப்பு சமுராய் வாள் ஒன்றையும் போதைப்பொருள் மற்றும் அதை உட்கொள்ளப் பயன்படும் கருவிகளையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
வழக்கமான சோதனைக்காக அல்ஜுனிட் ரோடு வழியே சென்ற கார் ஒன்றை அதிகாரி நிறுத்துமாறு காலை 11.25 மணியளவில் சொன்னார்.
பேருந்து நிறுத்தத்தில் காரை நிறுத்தவுள்ளதாக அதிகாரியிடம் அந்த ஓட்டுநர் தெரிவித்தும், அதன்பிறகு வேகமாக காரை ஓட்டிச் சென்றுவிட்டார்.
பின்னர், சாலைச் சந்திப்பு ஒன்றில் காரை நிறுத்திவிட்டு, அதிலிருந்து வெளியேறி ஆடவர் ஓடிவிட்டார்.
சிறிது தூரம் துரத்திய பிறகு அதிகாரி ஆடவரைப் பிடித்து தடுத்துவைத்தார்.
இது தொடர்பில் விசாரணை நடந்துவருகிறது.

