பதவியேற்றதும் குடியிருப்பாளர்களைச் சந்தித்த பிரதமர் லாரன்ஸ் வோங்

3 mins read
a0ff976b-6f72-4eea-9cff-3b9db8d3a44f
பிரதமரும் மார்சிலிங் - யூ டீ குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் லிம்பாங் பிரிவுக்கான ஆலோசகருமான லாரன்ஸ் வோங், பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு தமது தொகுதி மக்களைச் சந்தித்து மகிழ்ந்தார். - படம்: த.கவி
multi-img1 of 2

சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக அதிபர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்ட திரு லாரன்ஸ் வோங், பதவியேற்பு சடங்கு முடிந்த பின்னர் தமது தொகுதி மக்களைச் சந்தித்தார்.

யூ டீ எம்ஆர்டி நிலையம் அருகேயுள்ள திறந்தவெளி அரங்கில் பதவியேற்பு நிகழ்ச்சியை ஒன்றுகூடி நேரலையில் கண்ட மார்சிலிங் - யூ டீ குழுத்தொகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள், பிரதமர் லாரன்ஸ் வோங்கை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

பிரதமரும், மார்சிலிங் - யூ டீ குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் லிம்பாங் பிரிவுக்கான ஆலோசகருமான லாரன்ஸ் வோங் புதன்கிழமை (மே 15) இரவு 10 மணி அளவில் அங்கு வந்தார்.

அவருடன் அவரின் துணைவியார், மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, மேயர் அலெக்ஸ் யாம், ஹனி சோ ஆகியோரும் வருகை அளித்தனர்.

“நான் தொடர்ந்து இந்தக் குழுத்தொகுதியை வழிநடத்துவேன். பிரதமராக மேலும் பல பொறுப்புகள் இருப்பதால் என்னால் முன்புபோல சமூக நிகழ்ச்சிகள் பலவற்றிலும் கலந்துகொள்ள முடியாமல் போகலாம். எனது குழு மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நான் உங்களைக் கைவிட மாட்டேன்,” என்று திரு லாரன்ஸ் வோங் தம் குடியிருப்பாளர்களுக்கு ஆற்றிய உரையில் உறுதியளித்தார்.

கடந்த 2015 ஆண்டிலிருந்து லிம்பாங் பிரிவுக்கும் மார்சிலிங் - யூ டீ குழுத்தொகுதிக்கும் அடித்தள ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார் திரு லாரன்ஸ் வோங்.

குடியிருப்பாளருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர் லாரன்ஸ் வோங்.
குடியிருப்பாளருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: த.கவி
அடித்தள அமைப்பின் தொண்டூழியர்களுடன் திரு லாரன்ஸ் வோங்.
அடித்தள அமைப்பின் தொண்டூழியர்களுடன் திரு லாரன்ஸ் வோங். - படம்: த.கவி

யூ டீ ரயில் நிலையம் அருகில் இருந்த திறந்தவெளியில் மே தினக் கொண்டாட்ட நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது. 1,000க்கும் மேற்பட்ட மார்சிலிங் - யூ டீ குழுத்தொகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் ஒன்றுகூடினர். குடியிருப்பாளர்கள் கைகோத்து பாடல்கள் பாடி மகிழ்ச்சியில் திளைத்தனர்.

பல ஆண்டுகளாக லிம்பாங் குடியிருப்பாளராக இருக்கும் தர்மராஜ் ராமநாதன், 57, திரு லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்றது தமக்கு மிக பெருமையாக உள்ளதாக கூறி மகிழ்ந்தார்.

“அவருக்குத் தன்னடக்கம் அதிகம். குடியிருப்பாளர்களின் கவலைகளை அறிந்து ஆதரவு அளிப்பவர்,” என்றார் அவர்.

“அருகில் இருக்கும் சுவா சூ காங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான கான் கிம் யோங் துணைப் பிரதமராகப் பதவியேற்றுள்ளது மேற்குப் பகுதி மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி,” என்று சுகாதாரம், பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் திரு தர்மராஜ் சொன்னார்.

“திரு லாரன்ஸ் வோங் குடியிருப்பாளர்களுடன் நெருக்கமாகப் பழகுபவர். மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, தீர்வுகளை உடனடியாக வழங்குவார்,” என்று இல்லத்தரசி ரத்தினகுமாரி, 69, கூறினார்.

“யூ டீ ஒரு சிறிய இடம். திரு லாரன்ஸ் வோங் பிரதமராகிய பிறகு இந்த இடம் இன்னும் அதிக பிரபலமாகும். லிம்பாங் பகுதியை பற்றி மக்கள் அதிகம் அறிவர்,” என்று பொதுத்துறை ஊழியரான ஜன்னத் நிஷா, 39, தெரிவித்தார்.

“லிம்பாங் தொகுதியில் திரு லாரன்ஸ் வோங் வழிநடத்தும் மக்கள் சந்திப்புகளில் வாரந்தோறும் பங்கேற்பேன். அவர் பலவகைகளில் என் குடும்பத்திற்கு உதவி செய்துள்ளார். அவர் பிரதமர் ஆனதும் அவரை அடிக்கடி சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்று கவலைப்பட்டேன். ஆனால், நிச்சயம் எப்போதும் போலவே மக்களைச் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது,” என்றார் தாதிமை இல்லத்தில் பணியாற்றும் ஜெனிஃபர் முனீஸ்வரி, 44.

sanush@sph.com.sg

குறிப்புச் சொற்கள்