போதைப்பொருள் தொடர்பான குற்றத்துக்காக பதினைந்து ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற குண்டர் கும்பல் தலைவர் ஒருவர் சிறைத் துறை அதிகாரிகளைத் தூண்டிவிட்டு மற்ற கைதிகள் குறித்த ரகசியத் தகவல்களைப் பெற்றார்.
அப்துல் கரிம் முகமது குப்பாய் கான் என்பவரின் தூண்டுதலின் பேரில் முகம்மது ஸுல் ஹெல்மி அப்துல் லத்திப் என்ற சிறைத் துறை அதிகாரி எதிர்த்தரப்பு குண்டர் கும்பல் சிறைக் கைதிகளின் தகவல்களை கணினிக் கட்டமைப்பில் இருந்து பெற்றார்.
மற்றோர் அதிகாரியான முகம்மது ஃபாத்தாஹுல்லா முகம்மது நூர்தின் மற்ற கைதிகள் சிறையில் எங்கிருக்கின்றனர் என்ற தகவல்களைக் கண்டறிந்தார்.
இதன் தொடர்பில் புதன்கிழமை (மே 15), 38 வயது அப்துல் கரிம் கணினி முறையைத் தவறாகப் பயன்படுத்தும் சட்டத்தின்கீழ் பல குற்றச்சாட்டுகள் புரிந்ததை ஒப்புக்கொண்டார். அந்தக் குற்றச்சாட்டுகள் சிறைத் துறை அதிகாரிகள் குற்றம் புரியத் துணைபோனது தொடர்பானது. அந்தச் சிறைத் துறை அதிகாரிகள் தற்பொழுது பதவியில் இல்லை.
இதில் ஃபாத்தாஹுல்லாவுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி பத்து வார சிறைத் தண்டனையும் ஹெல்மிக்கு 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் ஏழு வார சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
“அந்தச் சிறைத் துறை அதிகாரிகள் குற்றவாளி தாங்கள் செய்யும் பணியில் அவர் தொல்லை தராமல் இருப்பார் என்ற நம்பிக்கையில் தகவல்களைத் தந்தனர்,” என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.
அப்துல் கரிம் பல முறை குற்றம் புரிந்தவர் என்றும் அவர் மீண்டும் மீண்டும் குற்றங்கள் புரிவதில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் அரசாங்கத் துணை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.