சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக திரு லாரன்ஸ் வோங் புதன்கிழமை பதவி ஏற்றதைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
சீனப் பிரதமர் லி சியாங், சீன-சிங்கப்பூர் உறவு முன்னேற்றத்திற்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியது.
“சீனா-சிங்கப்பூர் இடையே 1990ஆம் ஆண்டு அரசதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த முப்பது ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு அரசியல் நம்பகத்தன்மை தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.
“அதன் பயனாக பல்வேறு நன்மைகள் விளைந்துள்ளன,” என்று திரு லி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டு உள்ளார்.
உயர்தர இருதரப்பு ஒத்துழைப்பை வளர்க்கவும் வட்டார அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளப்பத்திற்குப் பெரிய அளவில் பங்களிக்கவும் பிரதமர் வோங்குடன் அணுக்கத் தொடர்புகொள்ள தாம் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் தளத்தில் பிரதமர் வோங்கிற்கு வாழ்த்துத் தெரிவித்து உள்ளார். இரு நாடுகளின் உத்திபூர்வப் பங்காளித்துவத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல பிரதமர் வோங்குடன் அணுக்கமாகப் பணியாற்றத் தயாராக இருப்பதாக அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் பிரதமர் வோங்கிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார்.
ஜப்பானுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த சிங்கப்பூரின் புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஜப்பான்-சிங்கப்பூர் இடையிலான உறவின் 60ஆம் ஆண்டு நிறைவு 2026ஆம் ஆண்டு கொண்டாடப்படுவதை தாம் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் பிரதமர் வோங்கிற்கு அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தியில், பிரிட்டனின் ஆக முக்கியமான தென்கிழக்கு ஆசியப் பங்காளித்துவ நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்று தெரிவித்து உள்ளார்.
மலேசியத் தலைவர்களும் பிரதமர் வோங்கிற்கு வாழ்த்துத் தெரிவித்து உள்ளனர்.
மலேசியத் துணைப் பிரதமர் ஸாஹிட் ஹமிடி அனுப்பி உள்ள செய்தியில், பிரதமர் வோங்கின் ஆற்றல்மிக்க தலைமைத்துவத்தின்கீழ் சிங்கப்பூர் தொடர்ந்து வளப்பமும் செழிப்பும் அடையும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
அமெரிக்கத் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் சிங்கப்பூருடனான உத்திபூர்வப் பங்காளித்துவத்தை வலுப்படுத்த பிரதமர் வோங்குடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருப்பதாக அச்செய்தியில் கூறியுள்ளார்.