சிங்கப்பூரைத் தெரிந்துகொள்ள விரும்பும் வருகையாளர்கள் சைனாடவுன், ஆர்ச்சர்ட் சாலை, கரையோரப் பூந்தோட்டம் ஆகியவற்றுடன் மேலும் 27 பிரபல சுற்றுலாத்தலங்கள் பற்றிய மின்னிலக்கத் தகவல்களை கூகல் வரைபடச் செயலியில் காணமுடியும்.
இதனை கூகல் மே 15ஆம் தேதி தனது வருடாந்தர மாநாட்டில் தெரிவித்தது.
கூகல் குழுமத்துக்கும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்துக்கும் இடையிலான பங்காளித்துவம் வாயிலாக இந்த முன்னோடி அம்சங்கள் இடம்பெறுவதாகவும் அது குறிப்பிட்டது.
உள்ளூர் வட்டாரத்தில் அதிகம் தெரிந்த பகுதிகளாக இருந்தபோதிலும் அவற்றின் மீதான ஆர்வத்தைப் புதுப்பிக்கும் வண்ணம் கவரக்கூடிய முன்னணித் தலங்களைப் பற்றிய தகவல்களை வழங்குவது அதன் நோக்கம்.
இந்த முன்னோடி அம்சத் திட்டத்தில் சிங்கப்பூரும் பாரிசும் மட்டுமே சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் கோடைப் பருவத்தில் கைப்பேசிச் செயலியில் அவை இடம்பெறும் என்றும் கூகலும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் மே 16ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் எந்த நாளில் செயலியில் அவை இடம்பெறும் என்பது பற்றி அறிக்கை குறிப்பிடவில்லை.
கூகல் வரைபடங்களைப் பயன்படுத்துவோர் தங்களது கைப்பேசியில் தங்களைச் சுற்றியுள்ள இடங்களின் ஏஆர் உயிரோவியங்களைக் காண அந்த இடங்களை நோக்கி கைப்பேசியைக் காட்ட வேண்டும்.
மத்திய வர்த்தக வட்டாரம், ஆர்ச்சர்ட் சாலை, செந்தோசா மற்றும் சைனாடவுன் ஆகியன தற்போது கூகல் வரைபடத்தில் பொலிவூட்டப்படுகின்றன.
கரையோரப் பூந்தோட்டம் உள்ள அலங்கார மின்மரங்களை உதாரணத்திற்கு, மெய்நிகர் மலர்கள் மீது கைப்பேசி கேமராவை வைத்தால் தரையிலிருந்து மிளிரும் மெய்நிகர் மலர்களைக் காணமுடியும்.

