பிரதமர் வோங் மீது சிண்டா, ‘சிக்கி’ நம்பிக்கை

2 mins read
df92cf38-5e47-4786-b40c-b547652a9952
புதிய பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிய பிரதமர் லாரன்ஸ் வோங், சிறுபான்மைச் சமூகத்தினருக்குக் குரல்கொடுப்பவர் என்று சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் நான்காம் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் பதவியேற்பு குறித்து, திரு அன்பரசு புதன்கிழமையன்று (மே 15ஆம் தேதி) திரு வோங்கிற்கு அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சமத்துவத்தின் மீதான திரு வோங்கின் நம்பிக்கையைக் குறிப்பிட்ட அவர், சமுதாயத்தில் நல்லிணக்கத்தையும் ஒருங்கிணைப்பையும் வளர்த்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

சிங்கப்பூரர்களின் குரல்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ள திரு வோங், அவர்களது அக்கறைகள், நம்பிக்கைகள், விருப்பங்களுக்காகப் பேசி வருவதாகவும் திரு அன்பரசு கூறினார்.

“உங்கள் அரசியல் பயணத்தின் தொடக்கத்திலிருந்தே, நம் நாட்டின் மீது நீங்கள் கொண்டுள்ள உறுதிமிக்க கடப்பாட்டைச் சிங்கப்பூரர்கள் கண்டுவந்துள்ளனர். ஒவ்வொரு மைல்கல்லிலும் நம் மக்களின் தேவைகளை முதன்மைப்படுத்தியுள்ளீர்கள்,” என்று திரு அன்பரசு, தம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2022ல் நடைபெற்ற சிண்டா உன்னத விருதுகள், 2023ல் சுயஉதவிக் குழுக்களுக்கு இடையேயான இளையர் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகியவற்றில் திரு லாரன்ஸ் வோங் கலந்துகொண்டதையும் அவர் சுட்டினார்.

இதற்கிடையே, பிரதமர் லாரன்ஸ் வோங் நிதியமைச்சராக இருந்தபோது சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் (சிக்கி) பல்வேறு கருத்துகளுக்குச் செவிசாய்த்து, உரிய நடவடிக்கைகளை எடுத்ததாக அதன் தலைவரும் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான நீல் பரேக் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

மக்களைக் கலந்தாலோசிக்கும் அரசாங்கத்தைப் பெறுவது சிங்கப்பூர் வர்த்தகச் சமூகத்தின் நற்பேறு எனப் பிரதமருக்கு புதன்கிழமையன்று அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திரு பரேக்.

கொள்கை வகுப்பதில் தங்களது நலன்கள் உறுதி செய்யப்படுவதில் பிரதமரின் பங்களிப்பு மிக முக்கியம் என்று அவர் கூறியுள்ளார்.

‘சிக்கி’ உள்ளிட்ட பல்வேறு தொழிற்சபைகளையும் வர்த்தகச் சங்கங்களையும் சேர்ந்த தலைவர்கள், திரு வோங்கின் நேரடி ஈடுபாட்டைப் பாராட்டுவதாகத் திரு பரேக் தம் கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

“உயரும் வர்த்தகச் செலவுகள், மின்னிலக்க உருமாற்றம் ஆகியவற்றின் தொடர்பில் வர்த்தகச் சமூகம் கவலை தெரிவித்த நிலையில், 2024ல் வரவுச் செலவுத் திட்டத்தின் மூலமாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதமராவதற்கு முன்பு திரு வோங், பல்வேறு நிலைகளில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து இந்தியச் சமூகத் தலைவர்கள் சிலர், தமிழ் முரசின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

குறிப்புச் சொற்கள்