மக்கள்தொகை விரைந்து மூப்படையும் அதேவேளையில் குறைவான பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ள சமூகத்தில் மூத்தோரை ஆதரிப்பதில் வேலைசெய்யும் பெரியோர் அதிக அழுத்தத்திற்கு ஆளாவதாக பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்து உள்ளார்.
விரைவில் மூப்படைதல், குறைவான குழந்தை பிறப்பு விகிதம் ஆகிய இரட்டை சவால்கள் ஊழியரணி சுருங்குவதோடு பராமரிப்பில் அதிக சுமை போன்ற தாக்கங்கள் வேலை செய்யும் பெரியோரிடையே காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
விரைவாக மூப்படையும் மக்கள்தொகை விவகாரத்தைச் சமாளிக்க தொழில்நுட்ப வளர்ச்சிகளை சிங்கப்பூர் பயன்படுத்தலாம் என்று அவர் யோசனை தெரிவித்து உள்ளார்.
சிங்கப்பூர் மக்கள்தொகை சங்க மாநாட்டில் பங்கேற்ற குமாரி இந்திராணி, அறிவுத்திறன் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த மூத்தோர் நீண்டகாலம் உயிர்வாழ்வதன் மூலம் சிங்கப்பூரின் ஊழியரணியின் அளவு அதிகமாக இருக்கும் என்றார்.
மேலும், ஆயுட்காலம் அதிகமாக உள்ள சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பது மூத்தோரை ஆதரிக்க இளையர் அடித்தளம் இல்லாமல் போகலாம் என்பதை உணர்த்துவதாக அவர் கூறினார்.
“வேலை செய்யக்கூடிய வயதில் உள்ளோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் வேளையில் நாம் நமது வளங்களைப் பெருக்க உள்ளோம்.
“வேலை செய்யும் பெரியோர்கள் மூத்தோரைப் பராமரிப்பதில் அதிக அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். வேலைக்கு இடையே பராமரிப்பைக் கவனிப்பது அவர்களுக்குக் கடினமாகத் தோன்றலாம்.
“ஒற்றையர் எண்ணிக்கை பெருகுகிறது. வயது முதிரும்போது அத்தகையோர் பலவீனமான குடும்பக் கட்டமைப்பை எதிர்நோக்குவார்கள்,” என்று குமாரி இந்திராணி தமது உரையில் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் குடும்பம் மற்றும் மக்கள்தொகை ஆராய்ச்சி மையமும் சிங்கப்பூர் மக்கள்தொகை சங்கமும் இந்த இருநாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து இருந்தன.
நாட்டின் வரலாற்றில் காணாத அளவுக்கு சிங்கப்பூர்வாசிகள் இடையிலான ஒட்டுமொத்த கருத்தரிப்பு விகிதம் 1க்குக் கீழ் குறைந்திருக்கும் நிலையில் குமாரி இந்திராணி ராஜாவின் கருத்து வெளியாகி உள்ளது.
2023ஆம் ஆண்டு அந்த விகிதம் 0.97 என்று பதிவானது. ஒவ்வொரு பெண்ணும் தங்களது கர்ப்ப காலத்தில் சுமக்கக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கையை இந்த விகிதம் குறிக்கிறது.

