ஏப்ரல் மாத ஏற்றுமதி 9.3% வீழ்ச்சி

ஏப்ரல் மாத ஏற்றுமதி 9.3% வீழ்ச்சி

2 mins read
0faf9fb3-85c2-484b-bacd-8debd00c997f
சிங்கப்பூரின் முக்கிய மின்னணுப் பொருள் ஏற்றுமதி மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ள வேளையில் மருந்துப் பொருள் ஏற்றுமதி தொடர்ந்து சரிந்ததாகக் கூறப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ஏப்ரல் மாத எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி, ஓராண்டுக்கு முன்புடன் ஒப்பிடுகையில் 9.3 விழுக்காடு வீழ்ச்சி கண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் அது 20.8 விழுக்காடு சுருங்கியது. ஏப்ரலில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக அது குறைந்துள்ளது.

சென்ற ஆண்டு (2023) ஏப்ரலில் ஏற்றுமதி 15.4 பில்லியன் வெள்ளியாக இருந்தது. அது அந்த ஆண்டின் சராசரி மாதாந்தர அளவான 14.4 பில்லியன் வெள்ளியைக் காட்டிலும் அதிகம் என்பதை என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு சுட்டியது.

இவ்வாண்டு ஏப்ரலில் மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியது. இருப்பினும் மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி தொடர்ந்து சுருங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

புளூம்பெர்க் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் பங்கேற்ற பொருளியலாளர்கள், ஏப்ரல் மாதத்தில் எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி ஓராண்டுக்கு முன்புடன் ஒப்புநோக்க, 6.7 விழுக்காடு சுருங்கும் என்று முன்னுரைத்திருந்தனர்.

ஓராண்டுக்கு முன்புடன் ஒப்பிடுகையில், ஏப்ரலில் மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி 3.3 விழுக்காடு அதிகரித்தது. மார்ச்சில் அது 9.5 விழுக்காடு குறைந்தது. கணினிகள், கணினி தொடர்பான சாதனங்கள் போன்றவற்றின் ஏற்றுமதி அதிகரித்ததாகக் கூறப்பட்டது.

மின்னணு சாராப் பொருள்களின் ஏற்றுமதி, ஓராண்டுக்கு முன்புடன் ஒப்புநோக்க, 12.3 விழுக்காடு சுருங்கியது. மார்ச்சில் அது 23.2 விழுக்காடு சுருங்கியது. மருந்துப் பொருள்கள், மின்சாரத்தில் இயங்காத இயந்திரங்கள், உணவுப்பொருள்களின் ஏற்றுமதி குறைந்தது இதற்குக் காரணம்.

சிங்கப்பூரின் ஏற்றுமதிச் சந்தைகள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் நாடுகளுக்கான ஏற்றுமதி ஏப்ரலில் குறைந்தது. இருப்பினும் சீனா, மலேசியா, ஹாங்காங், இந்தோனீசியா, ஜப்பான் ஆகியவற்றுக்கான ஏற்றுமதி மேம்பட்டது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், தென்கொரியா ஆகியவற்றுக்கான ஏற்றுமதி பெரிதும் குறைந்தது.

ஆண்டு அடிப்படையில், சிங்கப்பூரின் மொத்த வர்த்தகம் ஏப்ரலில் 15.7 விழுக்காடு அதிகரித்து 109 பில்லியன் வெள்ளியாகப் பதிவானது. எண்ணெய் சார்ந்த பொருள்கள், எண்ணெய் சாராப் பொருள்கள் என இருவகைப் பொருள்களின் வர்த்தகமும் அதிகரித்தது இதற்குக் காரணம்.

குறிப்புச் சொற்கள்