தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பால்டிமோர் பால விபத்து: கப்பல் பணியாளர்களின் நலனைப் பாதுகாக்க ஏற்பாடு

2 mins read
0a1724fc-4121-494d-be38-15cfda0cdf45
கப்பலில் விழுந்த பால்டிமோர் பாலத்தின் பாகங்கள் அண்மையில் வெடிவைத்து அகற்றப்பட்டன. - படம்: ஏஎஃப்பி

பால்டிமோர் பாலத்தில் சிங்கப்பூர் கொடி தாங்கிய கப்பல் மோதிய விவகாரத்தில் தொடர்புடைய பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் நியாயமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்ய கப்பல் பணியாளர் சங்கங்கள் இணைந்து பணியாற்றுகின்றன.

எம்வி டலி எனப்படும் அந்தக் கொள்கலன் தாங்கிக் கப்பல் மார்ச் 26ஆம் தேதி விபத்தில் சிக்கியது.

அப்போது அங்கு இருந்த பணியாளர்கள் அனைவரும் மே 13ஆம் தேதி நிலவரப்படி வெளியேறவில்லை. விபத்தால் சேதமடைந்த பாலம் கப்பலின் ஒரு பகுதி மீது விழுந்தது.

இரு நாள்களுக்கு முன்னர், கப்பலில் இருந்து அந்தப் பாகங்கள் வெடி வைத்து அகற்றப்பட்டன.

இந்நிலையில், பணியாளர்கள் அனைவரும் கப்பலில் பாதுகாப்பாக இருப்பதாக சிங்கப்பூர் கடல்துறை அலுவலர்கள் சங்கத்தின் உதவிப் பொதுச் செயலாளர் குவீ குவோ டுவான், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

அந்த 21 பேரையும் கப்பலில் இருந்து தற்காலிகமாக வெளியேற்றுவதற்கான அனுமதியைப் பெற அமெரிக்காவில் உள்ள கப்பல் பணியாளர் சங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

அவர்களில் 20 பேர் இந்திய நாட்டவர் எஞ்சிய ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர்.

விசா கட்டுப்பாடுகள் காரணமாகவும் விபத்து பற்றி அமெரிக்காவின் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (எஃப்பிஐ) நடத்தி வரும் விசாரணை காரணமாகவும் அவர்கள் கப்பலிலேயே தங்கி இருக்க வேண்டி உள்ளது.

“கிட்டத்தட்ட ஏழு வாரங்களுக்கு மேல் கப்பலுக்குள் இருப்பதால் அந்தப் பணியாளர்களின் மன உளைச்சல் அதிகரித்திருக்கும். எனவே, அவர்களை கடற்கரைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளோம்.

“அவ்வாறு செய்வதன் மூலம் ஒருசில மணி நேரமாவது அவர்கள் கப்பலைவிட்டு வெளியேறி நிம்மதியாக இருக்க முடியும்,” என்றார் திரு குவீ.

குறிப்புச் சொற்கள்