தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோத சூதாட்டம்; 32 சந்தேக நபர்கள் சிக்கினர்

1 mins read
0fc5bdb5-0f7c-4955-8cc1-2c994b300ee1
படம்: - பிக்சாபே

சட்டவிரோத சூதாட்டத்திற்கு எதிராக மே 2ஆம் தேதிக்கும் மே 10ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 32 சந்தேக நபர்களைக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும், சட்டவிரோத சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 10க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளைக் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் முடக்கியதாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை (மே 17) தெரிவித்தது.

விசாரணையின் கீழ் வைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் 18 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனக் கூறப்பட்டது.

அவர்களில் இருவர்மீது மே 3, மே 6 ஆகிய தேதிகளில் சட்டவிரோத சூதாட்ட சேவை வழங்குனருடன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

அவர்களில் பத்து பேர் சட்டவிரோத சூதாட்டம் தொடர்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காகத் தங்கள் வங்கி கணக்குகளின் விவரங்களைச் சூதாட்ட கும்பல்களிடம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், விசாரணையின் கீழ் வைக்கப்பட்டிருப்பவர்களில் 20 பேர் சட்டவிரோத இணையத்தளங்கள் கைப்பேசி செயலிகள் ஆகியவற்றின் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் சூதாட்ட கும்பல்களின் கட்டுப்பாட்டில் இருந்த வங்கிக் கணக்குகளில் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருவர் சூதாட்ட கும்பல்களுக்குத் தரகர்களாகச் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே அனைத்துவிதமான சட்டவிரோத சூதாட்டங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்